Tuesday, 12 September 2017

வள்ளி திருமணம்



சிவாய திருச்சிற்றம்பலம்

இன்று வரை நாம் அனைவரும் முருக கடவுளை வருணித்து சொன்னால், அவர் இரண்டு மனைவிக்கு சொந்தக்காரர் என்ற ஒரு தவறான கருத்தை தான் முதலில் முன் வைக்கிறோம். ஆனால் முருக கடவுளின் புராண வரலாற்றை சற்று ஆழமாக சிந்தித்து படித்தால் அதில் இருக்கும் எத்தனையோ தத்துவக் கூற்றை அறிய முடியும். என்னுடைய இந்த பதிவில் வள்ளி திருமணத்தை பற்றியும் அதிலிருக்கும் தத்துவங்களை நான் கற்ற வரை சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இன்றைய காலத்திற்கு ஏற்ற கருத்துக்களை அன்றே நமது முன்னோர்கள் சொல்லி விட்டு சென்றிருந்தாலும் நாம் அவற்றை பின்பற்றமலே போய் விட்டோம் என்று தான் சொல்ல வேண்டும்.
எடுத்துக்காட்டாக ஒரு புராண வரலாற்றை இங்கு சொல்கிறேன். திருவிளையாடற் புராணத்தில் சிவப் பெருமானே எழுதிய பாடல் ஒன்றுக்கு நக்கீரர் பொருள் குற்றம் இருந்த காரணத்தினால் பாட்டில் பொருள் குற்றம் உள்ளது என்று வாதிட்டார். பெருமான் இல்லையென்று வாதித்தாலும் நக்கீரர் குற்றம் குற்றமே, நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று தம் முடிவில் உறுதியாகவே இருந்தார்.
இதில் நாம் அறிவது என்ன தெரியுமா?
இறைவனே குற்றம் செய்தாலும், குற்றம் குற்றம் தான். அவன் இறைவன், அவன் செய்தது சரி என்று வாதிப்பது சரியல்ல, என்ற தத்துவத்தினை முன்வைத்தனர் நம் முன்னோர்கள். ஆனால் இன்று லஞ்சம் என்ற பெயரில் பல உண்மைகள் முடி மறைக்கப்பட்டு தான் வருகிறது. எவ்வளவு தான் மறைத்தாலும் ஒரு நாள் உண்மைகள் வெளி வரத் தான் செய்யும் என்பதில் எந்தவொரு ஐயமுமில்லை.

மேலே கூறிப்பிட்டது போல் வள்ளி திருமணத்தின் தத்துவங்களையும் கற்று தெளிதலை அவசியமாக கொள்ளுதல் வேண்டும். இனி புராண வரலாற்றை பார்ப்போம்.
வள்ளி பிராட்டி என்பவர் ஒரு மானுக்கு பிறந்த பெண் குழந்தை. அதுவும் மனித உடலோடு பிறந்த குழந்தை. பிறந்த குழந்தை தன்னுடையதல்ல என்று மான் இருந்த இடத்திலே குழந்தையை விட்டு போய் விட்டது. அதை கண்ட வேடுவர் குலத்தோன் அந்த  குழந்தையை தன் குழந்தையாக பேணி காத்து வளர்த்தார். முருக பெருமானுக்கு பூலோக மங்கையான வள்ளியின் மீது காதல் வயப்பட்டது. வேடுவனாக சென்று வள்ளியிடம் தன் காதலை சொன்னான், ஏற்று கொள்ளவில்லை. வயது முதிர்ந்த வயோதிகனாக வந்து அண்ணன் ஆனை முகன் துணையோடு  மணக்கலனார், என்பது நாம் அறிந்த புராண வரலாறு. இங்குதான் நாம் சற்றே சிந்திக்க வேண்டும். முருக பெருமான் எல்லா ஆற்றலையும் கொண்டவன். ஆசை, மோகம், பேராசை அனைத்திற்க்கும் அப்பாற்ப்பட்டவன். அவனுக்கு எப்படி இந்த காதல் வசப்பட்டது. அதுவும் ஒரு தெய்வத்திற்கு பூலோக மங்கை மீது எப்படி ஆசை வந்திருக்கும்.
அதுமட்டுமல்லாது, முருகனை புகழும் திருப்புகழிலும், வள்ளியின் மீது முருகனுக்கு இருக்கும் மோகத்தை  தான் அருணகிரியார் சொல்கிறார். இது எப்படி?
நண்பர்களே,
வள்ளி என்பவள் பிரதிநிதி. நமக்கெல்லாம் அவர் தான் பிரதிநிதி. அதிலும் முருகன் மட்டும் தான் ஆண்பிள்ளை. ஆனால் நாம் எல்லோரும் பெண்ணால் பெற்றேடுக்கப்பட்ட பெண் பிள்ளைகள். பாலால் ஆண், பெண் என்று வேறுப்பட்டாலும் நாம் அனைவரும் பெண் பிள்ளை தான். ஆக முருக பெருமான் காதல், மோகம் கொண்டிருப்பது நம் மீது தான் என்பதை மறக்கக் கூடாது. முன்பு நான் சொன்னது போல் வள்ளியம்மை நமது பிரதிநிதி. அவன் வள்ளியிடம் காட்டும் அன்பு நம்மிடம் கொள்ளும் காதலாகும்.அதனால் தான் அருணகிரிநாதர் பல இடங்களில் வள்ளியின் மீது முருகனுக்கு உள்ள அன்பையும், காதலையும் சொல்கிறார். இதன் வழி, நம்மிடம் இறைவன் கொண்டுள்ளான் என்பதை உணர முடியும். அப்படி வள்ளியம்மையை போற்றும் வரிகளை நாம் இங்கு பார்ப்போம்.
1.         வள்ளியம்மை தவிர வேறு தஞ்சம் தமக்கு இல்லை என்று முருகவேள் தமது வேளையை (பொழுதை) அம்மையாருக் கென்றே போக்கினார் என்று          - திருப்புகழ் 1000
2.         உன் குழை ஒழையை தா. அந்த ஒழையில் உன் கண்கள், தனங்கள் முதலியவற்றால், நான் மனந் தளர்ந்து பரிதாப நிலையில் உள்ளேன் என்று சாசனம் (பத்திரம்)  எழுதி தருகின்றோம் என்று வள்ளிப் பிராட்டியிடம் முருக வேள் கூறியது          - 1002
3.         வள்ளியம்மையின் உறைவிடமாம் காட்டுக்கும் ஒர் அடிமை கும்பிடு போடும்படி வள்ளிப்பாற் காதல் மயக்கம் கொண்டார் முருகவேள் என்பது                         - 1151
4.         வள்ளியம்மைக்கு வழியடிமை யான் என்று முருக பிரான் மேருமலையிற் சாசனம் எழுதி வைத்தனர் என்பது   -1199
            - அருணகிரியாரும் வரலாறும் நூலாராய்ச்சியும், டாக்டர் வ.சு.செங்கல்வராயப்பிள்ளை
அவர்களின் நூலில் சிறப்பாக சுட்டிக்காட்டியுள்ளார். இவை மட்டுமின்றி முருகப்பெருமான் செய்த மற்றுமொரு காரியம் உண்டு. அதனை அருணகிரியார் அழகு தமிழில் கொஞ்சி சொல்கிறார்.
" பாகு கனிமொழி மாது குறமகள்
                                                            பாதம் வருடிய                       மணவாளா"

என்ற இந்த ஒரு வரியினால் வள்ளி முருகனின் பெருமையை உயர்த்திவிட்டார் அருணகிரியார். கழைப்பால் துயல் கொண்டிருந்த வள்ளிக்கு பாதம் பிடித்துவிட்டு பணிவிடை செய்வதாக பொருள்படும் இவ்வரிகளில் முருக கடவுள் நம்மிடம் கொண்டிருக்கும் அன்பினை எவ்வளவு எழிமையாக சொல்லியுள்ளார்.

இதன் வழி நாம் அறிவது என்னவென்றால் இறைவன் என்பவன் எல்லா நிலைகளிலும் நம்மிடம் அன்பினை செலுத்தி கொண்டு தான் இருக்கிறான். ஆனால் நாம் தான் அவன் பெயரால் தவறுகளையும் பெறும் பாவங்களையும் செய்து உண்ட வீட்டிற்கு தூரோகம் விளைவிப்பதாக நடந்து கொள்கிறோம். வசதிகளும், பதவிபட்டங்களாலும் நாம் உயர்ந்தவர் என்ற எண்ணத்தை விடுத்து ஏழ்மையை கை கொள்ளுவோம். இறைவன் நமக்கென்று கொடுக்க வேண்டியதை தக்க சமயத்தில் தருவான்.

1 comment:

மறந்து போகும் தமிழ் சான்றோர் - வ. உ. சிதம்பரம் பிள்ளை

  வ. உ. சிதம்பரம் பிள்ளை வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார். அவர், 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் இந்த...