ஆலயம் என்பது தமிழர்களின் பண்பாட்டு
கலைக் கூடகங்களில் ஒன்றாக போற்றப்படுபவை. நமது முன்னோர்கள் மக்கள் நலனுக்காக
செய்து வந்த காரியங்களின் துவக்கமே ஆலயங்கள் தான். மேலும் சொல்லப் போனால், கோவில் இல்லாத ஊரில் குடியிருக்காதே என்று சொன்னதற்கு இதுவும் ஒரு
காரணமாக தான் அமையும்.
சமயத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தி ஆலயம் அமைக்கப்படவில்லை.
பொது மக்களின் வாழ்வியலுக்கும் பயனலிக்கும் நோக்கத்திலே சிற்பங்களாகவும், வழிப்பாட்டுகள் மூலமாகவும் சூட்சமமாக சொல்லி சென்றனர். அதுமட்டுமல்லாது தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் ஆலயங்கள் பல வகையில்
பாடுபட்டுள்ளது என்பதில் எந்த காலத்திலும் மறக்கலாகாது.
அப்படியிருக்கும் பட்சத்தில் இன்று அதே
ஆலயங்களில் தமிழால் வழிப்பாடுகள் செய்ய ஒரு குறையாகவே உள்ளது. அதுமட்டுமல்லாது
தமிழால் பூஜைகள் செய்யும் போது பலரும் அதன் மகிமை உணராது தங்களது வீட்டு
பிரச்சனைகளில் முக்கியத்துவம் வழங்கி இன்றும் மூடர்களாய் உள்ளனர். இப்பதிவின்
நோக்கம் சமஸ்கிருத மொழியை சாடுவதல்ல. சமஸ்கிருதத்தில் உள்ள மந்திரங்களுக்கு தரும்
மதிப்பை தமிழ் வேதம் என போற்றப்படும் திருமுறைகளுக்கும், திருப்புகழுக்கும் தர மறுக்கின்றனர் என்பதே இப்பதிவின்
குற்றச்சாட்டு. ஒவ்வொரு ஆலயத்திலும் விஷேச பூஜை நேரத்தில் சமஸ்கிருத மொழியால்
பூஜைகள் செய்யும் போது தமிழ் பாமாலை ஒதுவதற்கும் இடமுண்டு. இதனை பலரும் அறிந்த
ஒன்று தான் ஆனால் யாரும் அதனை சரியாக பின்பற்றவில்லை என்பது தான் உண்மை.
தமிழ் பாமாலை என்று குறிப்பது
திருமுறைகளை தான். சேரன். சோழன், பாண்டியன் காலங்களில் திருமுறைகள்
பன்னிரெண்டையும் ஒதியே வழிப்பாடுகள் செய்யப் பெற்றன. அதன் பின், காலத்தின் கட்டாயத்திற்கு ஏற்றவாறு பூஜைகள் செய்யப்பட்டது. அதில்
பன்னிரெண்டு திருமுறைகளாக ஒதப் பெற்ற திருமுறை பாடல்களை ஐந்தாக குறைத்து
பஞ்சபுராணம் என்ற பெயரில் ஒதினர். பஞ்சபுராணம் என்பவை தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு மற்றும் பெரிய புராணம் என்று வகுத்து கொண்டு
ஒதினார்கள். தமிழ் மொழியால் பாடப் பெறும் இத்திருமுறைகள் இறைவனாகவே கேட்டு
கொண்டதாகும். இதற்கு சான்று சுந்தரமூர்த்தி நாயனார் வரலாற்றில் சுந்தரரை இறைவன்
தடுத்தாட் கொண்ட போது நம்பியரூரனை சுந்தர தமிழால் பாட்டிசைக்க சொன்ன வரலாறு.
அதுமட்டுமின்றி, திருநாவுக்கரசர் சொல்கிறார்
"சலம்பூவோடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசைப் பாடல் மறந்தறியேன்"
என்றும் திருஞானசம்பந்தர் தமது
திருபதிகங்களில் தம்மை தமிழ்ஞானசம்பந்தன் என்றே கூறிப்பிட்டும் கொள்கிறார்.
திருமுறையா அல்லது சமஸ்கிருதத்தில்
உருவான மந்திரங்களா என்று ஒப்பிடுகையில் திருமுறைகள் தான் முன்னிலை வகிக்கும்.
காரணம் மந்திரங்களின் மூலம் அற்புதங்கள் பல நடந்துள்ளதற்கான சான்று ஒன்று
கூடயில்லை. சமஸ்கிருதம் என்பது தேவ பாட்ஷை இறைவனிடம் பேச உதவும் மொழி. ஆனால் தமிழ்
வேதங்களோ அவனை உளம் குளிர்விக்கும் தேவமிர்தம். மந்திரங்களை குற்றம் சாட்டுவதற்காக
சொல்லவில்லை, திருவாசகத்தில் சொன்னது போல்
"சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவப்புரத்தி
னுள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து"
என்று நாம் சொல்லும்
மந்திரங்களாகட்டும், பாராயண தோத்திரங்கள் ஆகட்டும் அவற்றின் பொருளை உணர்ந்து பாடுவதால்
தான் இறைவனின் பேராற்றல் பரிபூரணமாக கிடைக்கும். பாட்டின் பொருள் தெரியாது
ஏடுகளில் உள்ளதை படித்துவிட்டால் மட்டும் போதாது என்பதனை நன்கு தெளிவுபடுத்தி
கொள்ளுதல் அவசியம். ஆனால் திருமுறைகள் ஆகட்டும் திருப்புகழாகட்டும் பாமரனும்
புரிந்து கொள்ளும் வகையில் தான் அமையப்பட்டுள்ளது. எழில் மிகு தமிழால் மென்மையான
வார்த்தைகளால் வருணித்து உள்ளோம் நெகிழ்ந்து அருளியவை. உள்ளம் உருகி ஒதினால்
கலங்காத கல் நெஞ்சும் கறைந்து போகும்.
சொல்ல சொல்ல அடக்கத்தில் இல்லாத
பேறுகளை பெற்றவை தான் நமது தமிழ் வேதம். அரசர்கள் காலங்களில் இத்தமிழ் மறைகளை ஒதக் கூடியவர்களை ஒதுவார்
என்று பணிவோடும் மரியாதையாகவும் கூறுவர்.
பல சுபக்காரியங்கள் இவர்களை முன்னிலைப்படுத்தியே நடத்தப்படுவதும் உண்டு.
ஆனால் இன்று நமது நாட்டை பொருத்த வரையில் ஒதுவார்களுக்கு பஞ்சமாகிய நிலையில்
உள்ளன. அதுமட்டுமல்லாது, பல ஆலயங்களில் திருமுறைகள் ஒதப்படமலே
பூஜைகள் நடந்த வண்ணம் உள்ளது. அப்படியே ஒதப்பெற்றாலும் ஆலய குருக்கள் சிலர்
அவர்களை இரண்டு அல்லது மூன்று பாடல்களை மட்டும் பாட சொல்லி கால அவகாசம்
கொடுக்கின்றனர். காரணம் பொது மக்களால் அவ்வளவு நேரம் காத்திருந்து சுவாமியை
தரிசனம் செய்ய முடியாதாம். இப்பொழுதெல்லாம் திருமுறைகள் இறைவனுக்காக பாடப்படவில்லை
மக்களுக்காக அவர்களின் விருப்பத்திற்காகவே பாடப்படுகிற நிலை! எத்துணை கேவலம். நம்மால் வழிப்பாட்டிற்க்கும் நேரத்தை ஒதுக்க முடியாத
நிலையா?
வெள்ளம் வரும் முன் தான் அணை போட
வேண்டும் வந்த பின் போட்டு பயனில்லை. இதனை இங்கு கூறிப்பிட காரணம் துன்பம் வந்த
பின் இறைவனிடம் முறையிடுவதை விடுத்து அவன் அருளால் கிடைக்கப் பெற்ற நலத்தோடு
இருக்கும் போதே நன்றி விசுவாசத்தை காட்ட வேண்டும்.
ஆக ஆலயங்களில் திருமுறைகள் ஒதப்படுவதை
ஒவ்வொரு பக்தர்களும் முதலில் உறுதி செய்து கொள்வது அவசியம். அதற்கு முன் நாம்
பயிற்சி பெற்ற மாணவராக இருத்தல் வேண்டும். பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு
சமயத்தை போதிக்கவும், திருமுறைகளை கற்றுக் கொள்ள ஊக்குவிக்க
வேண்டும். குடும்பத்தோடு ஆலயத்திற்கு சென்று இறைவன் சன்னதிக்கு முன்னின்று
அவருக்கு உரியப் பாடல்களை ஒதிப் பிரார்த்திக்கவும் செய்ய வேண்டும். ஆலய
உறுப்புனர்கள் தங்களது ஆலய பூஜை காலங்களில் பஞ்சபுராணம் ஒதுதலை கட்டாயப்படுத்துதல்
வேண்டும். சிவன் ஆலயமாகயிருந்தால் பஞ்சபுராணமும், முருகன் ஆலயமாகயிருந்தால்
பஞ்சபுராணத்தோடு திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி, கந்தர் அநுபூதி ஒதுதலையும், அம்மன் ஆலயங்களில் பஞ்சபுராணமும்,
அபிராமி அந்தாதியும் ஒதப்பட வேண்டும்.
இறுதியாக நமது பண்பாட்டையும்
வழிப்பாட்டு முறைகளையும் சரியாக பின்பற்றினாலே போதும், யாரும் நம்மை ஏமாற்றவோ, அல்லது தெரியாத சடங்கு முறைகளின்
பதிப்போ நம்மை அண்டாது.
சிவாய திருசிற்றம்பலம்
No comments:
Post a Comment