இந்து பெருமக்களின் விஷேச காலங்களின்
அடிப்படையில் இன்று நாடு தழுவிய அளவில்
நாம் நவராத்திரி பண்டிகையை ஒன்பது நாட்களுக்கு கொண்டாடி கொண்டிருக்கிறோம்.
நவராத்திரியின் முக்கிய அம்சமே அம்பிகையின் ஒன்பது அவதாரங்களை பூஜித்து பத்தாவது
நாளாக விஜய தசமியன்று மஹிஷசுரனை வதம் செய்யும் காட்சியை தொழுவதே ஆகும். மூன்று
நாட்களுக்கு துர்க்கையாக, மூன்று நாட்களுக்கு லட்சுமியாக, மற்றும் மூன்று நாட்களுக்கு சரஸ்வதியையும் வழிப்படுவது வழக்கம்.
இந்த நவராத்திரி விழா பல உள்
அர்த்தங்களை அடக்கியவை. ஆனால் அது பலருக்கும் தெரியாதவொன்று. நவராத்திரியின் முதல்
மூன்று நாட்கள் துர்க்கையம்மனை வழிப்படுகிறோம். துர்க்கையம்மன் என்பவர், வீரத்தினை தந்து நம்முள் இருக்கும் சோம்பலை அகற்றுபவர். அம்பிகை
நம்மிடம் இருக்கும் தமோ குணத்தினை இங்கு அகற்றுகிறார். சித்தாந்தரிதியாக சொன்னால்
நம்முள் இருக்கும் மும்மலங்களாகிய ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றை போக்குகிறார்.
அதனை தொடர்ந்து, வரும் மூன்று நாட்களில் மகா லட்சுமி தேவியை வழிப்படுகிறோம். லட்சுமி
தேவி செல்வத்தின் அதிபதி என்பது நாம் அறிந்தவொன்று. ஆனால் லட்சுமி தேவி நமெல்லாம்
நினைப்பது போல் அவர் பணம் படைக்கும் தெய்வம் அல்ல. புகழ், மரியாதை, அன்பு, தனம், தானம், தான்யம் ஆரோக்கியம் ஆகிய செல்வங்களை
வழங்குபவர். இந்த மூன்று நாட்களில் மகா லட்சுமி நம்முடைய இராஜச குணத்தை
அழிக்கிறார். பேராசை, நம்மை பிடித்திருக்கும் பிணிகள்
அனைத்தையும் அழித்துவிடுகிறார். அடுத்ததாக கல்வியின் அதிபதி சரஸ்வதி தேவிக்கு
உகந்தவையாக இறுதி மூன்று நாட்கள் அமைகிறது. அன்று சரஸ்வதி தேவி நமக்கு சாத்விக
குணத்தை அருளுகிறார். ஆக நவராத்திரியின் பத்தாவது நாளாக விஜய தசமியை நாம்
கொண்டாடுகிறோம். அன்று முப்பெரும் தேவியர்களும் ஒன்று சேர்ந்து ஆதிபாரசக்தியாக உரு
கொண்டு, மஹிஷசுரனை சம்ஹாரம் செய்கிறார்.
அன்பர்களே, பல யுகங்களுக்கு முன்பே அன்னை பராசக்தி மஹிஷசுரனை சம்ஹாரம்
செய்துவிட்டார். பின் எதற்காக ஆண்டு தோறும் நாம் ஆலயங்களில் இந்த வழக்கத்தினை
பின்பற்றி கொண்டிருக்கிறோம்? காரணம் அவ்வசுரனின் சாபம் நம்மை விடாது
பிடித்து கொண்டு தான் வருகிறது. அச்சாபம் என்னவென்று தெரியுமா? பிறர் உடமைகள் மீது ஆசை கொள்ளுதல், ஆணவத்தில் முழ்கிவிடுவது, பேராசை, சுயநலம், குறிப்பாக நான் என்ற அகந்தை கொள்வது, என்று நம்முள் அரக்கன் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறான். அவனை
அழித்து இந்த ஆன்மாவிற்கு தூய்ம்மையை கொடுப்பதே சம்ஹாரத்தின் தத்துவம்.
இப்புனித நாட்களில் நாம்
அம்பிகையிடத்தில் எதை பிரார்த்திக்க வேண்டும் என்று அபிராமி பட்டர் அந்தாதியாக
சொல்லியிருக்கிறார். அவை பின்வருமாறு
கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கபடு வராத நட்பும் கன்றாத வளமையும்
குன்றாத இளமையும் கழுபினியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தனாமும் தாளாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கோடையும்
தொலையாத நீதியும் கோணாத கோளும்
ஒரு துன்பமில்லாத வாழ்வும், உதவி பெரிய கொண்டரோடு கூட்டு கண்டாய்
ஆளயாலில் அறிதுயிலும் மாயானது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே அமுதிசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே.
இதை கேட்டாலே போதும் அவள் நமக்கு
நிச்சயம் தருவாள். கேட்பதை நாம் கேட்டுவிட்டோம். உமையவள் எதை நமக்கு கொடுப்பாள்
தெரியுமா? அதையும் பட்டர் நமக்கு சொல்லித் தான் சென்றார். அவை பின்வருமாறு
தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வு அறியா
மனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே--
கனம் தரும் பூங் குழலாள், அபிராமி, கடைக்கண்களே
ஆக இறைவனிடத்தில் நாம் கேட்பது இதனை
தான் அவன் தருவதும் இதனை தான். இதையே தான் வள்ளாலரும் நம்மிடத்தில்
வலியுறுத்துகிறார். அவை பின்வருமாறு
ஒருமையுடன் நின்திரு மலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் உறவு களவாமை வேண்டும்
பெருமை பெற நினது புகழ் பேச வேண்டும்
பொய்மை பேசதிருக்க வேண்டும்
பெரு நெறி பிடித்தொழுக வேண்டும்,
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்.
மருவு பெண்ணாசை மறக்கவே வேண்டும்,
உன்னை மறவாதிருக்க வேண்டும்
மதி வேண்டும், நின் கருணை நிதி வேண்டும்
நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்
தர்மம் மிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர் தளம் ஒங்க கந்த வேலே
தன்முகத் துய்யமணி உன்முக சைவமணி சண்முக தெய்வமே.
என்று அவரும் தெளிவுபடுத்தி தான்
சென்றுள்ளார்.
ஆக இறைவனிடத்தில் கேட்க வேண்டியவற்றை
முறையாக கேட்க வேண்டும். அத்தோடு நம்முடைய வழிப்பாட்டின் தத்துவங்களை அறிந்து
வழிப்படுவது சிறப்பு. அதுமட்டுமின்றி, நமக்கு தெரிந்தவற்றை நமது
பிள்ளைகளுக்கு போதித்தல் அவசியம். நம்முடைய பண்பாட்டை அழிவிற்கு கொண்டு போகாமல்
அவற்றை நம் சந்ததியினருக்கு போதித்து வளர்ப்போம்.