Sunday, 26 April 2020

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்



ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்கள், 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் ஒருவர். ‘கடவுள் ஒருவரே, வழிபாட்டு முறைகள் அனைத்தும் கடவுளை அடைவதற்கான பல வழிகள்’ என்பதை தெளிவுபடுத்தி, இந்திய மக்களுக்கு ஆன்மீக ஞானஒளியாய் திகழ்ந்தவர். இந்தியாவின் ஆன்மீகப் பேரொளியை, அமெரிக்கா, ஐரோப்பா எனப் பிறநாடுகளுக்கும் கொண்டுசென்று, வேதாந்தத் தத்துவங்களை மேற்கிந்தியா முழுவதும் பரப்பிய சுவாமி விவேகானந்தரை இவ்வுலகிற்குத் தந்தவர். அனைத்து மதங்களும் ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு வழிகளே என்பதைத் தன் அனுபவத்தின் மூலமாக உணர்ந்து, அதையே வலியுறுத்திய ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கை வரலாறு மற்றும் ஆன்மீகச் சிந்தனைகளை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: பிப்ரவரி 18, 1836
இடம்: காமர்புகூர், மேற்குவங்கம் மாநிலம், இந்தியா
இறப்பு: ஆகஸ்ட் 16, 1886
தொழில்: ஆன்மீகவாதி, துறவி
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு
‘ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்’ என அறியப்படும் காதாதர் சாட்டர்ஜி அவர்கள், 1836  ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18  ஆம் நாள், இந்தியாவின் மேற்குவங்காளம் மாநிலத்தில் ஹூக்லி மாவட்டதிலுள்ள “காமர்புகூர்” என்ற இடத்தில் ‘குதிராம்’ என்பவருக்கும், தாயார் ‘சந்திரமணி தேவிக்கும்’ நான்காவது குழந்தையாகப் பிறந்தார். இவர் ஒரு பிராமணக் குடும்பத்தைச் சார்ந்தவர்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
சிறுவயதில், ஆடல் பாடல்களிலும், தெய்வங்களின் படங்கள் வரைவதிலும், களிமண்ணில் சிலைகள் செய்வதிலும் ஆர்வமாயிருந்த ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு, கல்வி பயில்வதில் ஆர்வம் இல்லை. மேலும், ராமகிருஷ்ணரின் குடும்பம் மிகவும் ஏழ்மையில் இருந்ததால், தன்னுடைய 17 வயதில் குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலைக் காரணமாக, தமது அண்ணன் வசித்து வந்த கல்கத்தாவிற்கு வேலைத் தேடி சென்றார். அங்கு, அவருடைய அண்ணன் ராஜ்குமார், தட்சினேஸ்வர் காளி கோயிலில் ஒரு புரோகிதராக வேலைப் பார்த்து வந்தார். சிறிதுகாலம் தன்னுடைய அண்ணனுக்கு உதவியாக அங்கேயே தங்கி வேலைப்பார்த்து வந்த ராமகிருஷ்ணர், ராஜ்குமார் இறந்தவுடன் காளி கோயிலின் பூசாரியானார்.
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆன்மீகப் பயணம்
தட்சினேஸ்வர் காளி கோயிலில் தினந்தோறும் பூஜை செய்துவந்த ராமகிருஷ்ணருக்கு, அவ்வப்போது பல சந்தேகங்கள் எழுவதுண்டு, ‘தாம் கல்லைத்தான் பூஜை செய்கிறோமா கடவுள் என்று’ நினைத்த அவர், ‘காளி கடவுளாக இருந்தால், தனக்குக் காட்சி அளிக்குமாறு தினமும் பிரார்த்தனைகளையும், தியானமும் செய்தார். எனினும் தன்னுடைய முயற்சிக்கு பலனில்லை என்பதை உணர்ந்த அவர், காளியின் கையில் இருந்த வாளினால் தன்னைத்தானே கொல்ல முயற்சித்தார். அத்தருணத்தில், தன்னுடைய சுயநினைவை இழந்ததாகவும், ஒரு பேரானந்த ஒளி அவரை ஆட்கொண்டதாகவும், பின்னர் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வுக்குப் பிறகு, ராமகிருஷ்ணரின் நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் தெரிந்தது. இவருடைய நடவடிக்கைகளைக் கண்ட ராமகிருஷ்ணரின் பெற்றோர்கள் அவருக்கு திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் செய்தனர். அதன் விளைவாக காமர்புகூர் அருகில் உள்ள ஜெயராம்பாடி என்ற ஊரில் சாரதாமணி என்ற பெண் தனக்காக பிறந்ததாகவும், அப்பெண்ணே தன்னை மணம் புரிய பிறந்தவள் என்று கூறி, அவரையே திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகும், பக்தி, ஆன்மீக மார்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு விளங்கிய ஸ்ரீ ராமகிருஷ்ணர்,  தாம்பத்தியம் ஏற்காமல் மனைவியைத் தாயாக மதித்து, தெய்வீக வாழ்வு நடத்தினார். 
பைரவி பிரம்மணி என்ற குருமாதாவிடம் தாந்ரிகம் கற்றுத் தேர்ந்த அவர், பின்னர் தோதா புரி என்பவரிடம் அத்வைத வேதாந்தத்தைக் கற்றார். இந்திய நாட்டினர் மற்றும் இந்து மதத்தினர் என்றில்லாமல், மனித இனம் முழுமைக்கும் ஒரு ஆன்மீக வழிகாட்டியாகத் திகழ்ந்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணர் வேதாந்த உண்மைகளைக் கண்டறிந்தவர் மட்டுமல்ல, பிறருக்கு அதை உணர்த்துவதிலும் வல்லமைப் படைத்தவராக விளங்கினார். பாமரர் முதல் பண்டிதர் வரை அனைவரின் மனத்திலும் ஆன்மீக விளக்கெரிய தூண்டுதலாக அமைந்தார். இவரின் ஆன்மீகச் சிந்தனை உலகெங்கும் பரவி, அவதாரப் புருஷர் என்று அனைவராலும் போற்றப்பட்டார். மேலும், பலர் நாடி வந்து சீடர்களானார்கள். இவர்களுள் நரேந்தரநாத் தத்தா எனப்பட்ட சுவாமி விவேகானந்தர் குறிப்பிடத்தக்கவர். மேலும், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் இறப்புக்குப் பிறகு, சுவாமி விவேகானந்தரால் நிறுவப்பட்ட ராமகிருஷ்ண மடம், இன்றளவும் ஆன்மீக வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி வருகிறது.



ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சிந்தனைத் துளிகள்
·   ஒருவன் வாழ்வில் இறைவன் அருளைப் பரிபூரணமாகப் பெற்ற பின்னரே, பிறருக்கு போதனை செய்ய முன்வர வேண்டும். அப்பொழுது தான் அது நல்ல பயனைப் பிறருக்குத் தரும்.
·  இல்லற வாழ்வில் இருந்தாலும், இறையருள் பெற விரும்புபவர்கள் அவ்வப்போது தனிமையைத் நாடிச் சென்று இறைவனுக்காக ஏங்கி அழவேண்டும்.
·   உலக வாழ்வில் ஈடுபட்டாலும், இறைவனே நமக்கு சொந்தமானவன் என்னும் உள்ள உறுதியோடு வாழ வேண்டும்.
·      சிலருடைய உள்ளம் கல்சுவர் போல உறுதியாக இருக்கும், அதில் ஆணி அடித்தால் அது வளைந்து போகும். அதுபோல எவ்வளவு முயன்றாலும் அவர்களுக்கு ஆன்மீக விஷயம் எதுவும் உள்ளே போகாது.
· மக்களுள் பெரும்பாலோர் புகழுக்காகவோ, புண்ணியத்தைத் தேடும் பொருட்டோ பரோபகாரம் செய்கின்றனர். அத்தகைய சேவைகள் யாவும் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டவை
இறுதி வாழ்க்கை
தாம் கற்றறிந்த உண்மைகளை மக்களுக்கு போதித்தது மட்டுமல்லாமல், எப்படி பக்தியோடு இருப்பது என்றும், அவற்றைத் தானும் கடைபிடித்து வாழ்ந்துக்காட்டிய ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், இறுதி நாட்களில் தொண்டை புற்றுநோயால் அவதியுற்றார். அவருடைய சீடர்கள் அவரை கல்கத்தாவிலுள்ள காசிப்பூர் என்ற இடத்தில் வைத்து வைத்தியம் செய்தனர். இருந்தாலும், 1886 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 அன்று அவர் உடலை விட்டு, உயிர் பிரிந்தது.
உலக நன்மைக்காகவும், ஆன்ம விடுதலைக்காகவும் துறவறம் பூண்ட ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்கள், இந்தியாவில் வாழ்ந்த “ஒப்பற்ற மனித தெய்வம்” ஆவார். இயற்கைப் பேரறிவும், செயற்கைப் பேரறிவும் ஒருங்கே பெற்ற அவர், இன்று உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள், ஆத்மார்த்தமாக வணங்கும் ஆன்மீக குருவாக விளங்கிக் கொண்டிருக்கிறார் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.





Sunday, 8 March 2020

சரியான வழிதடத்தை நோக்கி செல்வோம்

சமீப காலமாக வலைத்தளங்களில் இந்து சமயத்தை குறித்து அவதூறான கருத்துக்களை வெளிப்படுத்தும் கணோலி அதிகமாக பரவி வருவதை நான் கண்டேன். குறிப்பாக இந்தியாவை சேர்ந்த திராவிட கழகத்தை சார்ந்த அரசியல் தலைவர்களுடைய பதிவுகளே, அதிகமாக காணப்பட்டு வருகிறது. ஒரு புறம், பக்தி மார்க்கத்தில் இருந்து கொண்டு ஒருவர் இந்து சமயத்திற்கு இன்னல் விளைவித்து கொண்டு வருகிறார்; மற்றொரு புறம், இறைவனையே தூற்றி பேசுவார் பின்னர் அவரையே எங்களது பாட்டன், அவனன்றி எதுவும் இல்லை என்று நா கூசாமல் பேசுவார் ஒருவர்.

இவர்களையெல்லாம் கடந்து ஆதி மூலன் ஒருவனை தவிர மற்றவர் எல்லாம் சிறு தெய்வத்திற்கு சமமானவர் என்றும் சொல்வர். திருமுறைகள் தான் எங்கள் வாழ்வு என்பர். பிறகு நால்வர் காட்டிய வழியை மட்டுமே பின்பற்றுவோம் என்பார். இவர்களது பேச்சை கேட்க இருக்கு ஆனால் இல்லை, என்ற விதாண்ட வாத பேச்சுக்கு ஒப்பாக அமைந்துள்ளது.
திருமுறைகளை சைவ சமயத்தில் சேக்கிழார் பெருமான் பன்னிரண்டாக பிரித்து நமக்கு அருளியுள்ளார். அவற்றில் விநாயகர், முருகன், சக்தி, பெருமாள் என சன்மத கோட்பாட்டிற்கு இணங்கிய வண்ணம் தெய்வங்களை குறிப்பிட்டு அருளாளர் பெருமான்கள் நமக்கு அருளியுள்ளனர். அதை மறுக்க இயலுமா?

பரம்பொருள் என்பவர் ஒருவர்தான் என்ற கருத்தை கட்டாயம் எடுத்து கொள்ளத் தான் வேண்டும். ஆயினும், அவரவருடைய நம்பிக்கையை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை பதிய வேண்டாம் என்பதே என்னுடை வேண்டுகோள் ஆகும். நமக்குள் நாமே தெய்வங்களை பிரித்து சண்டை போடுவதற்கு இது சோழர்கள் காலம் அல்ல. உலகம் நவீன மயமாகி போய் கொண்டிருப்பதை சற்று சிந்திக்கவும் வேண்டுமே என்றுதான் சொல்கிறேன். எம்முடைய இப்பதிவு யார் மீதும் கொண்டிருக்கும் தனிப்பட்ட கோபத்தை வெளிப்படுத்துவதாக இல்லை.


நமது நாட்டில் அவ்வப்போது எழக் கூடிய மதமாற்ற பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வினை கொண்டு வர வேண்டும் என்பதே ஆகும். இப்படிப்பட்ட சூழலில் சமய அறிவு குன்றியிரக்கும் பாமர மக்களிடத்தில் குழப்பத்தை உண்டு செய்வது தவறு என்ற என்னுடைய தரப்பு கருத்தை பதிக்கிறேன். அதுமட்டுமல்லாது நாம் ஒரு இந்துவாக, சனதன தர்மத்தை கைப்பற்றியிருக்கும் சைவராக, வைஷ்ணவராக தாழ்மையோடு கேட்டு கொள்வது என்னவென்றால், சமூக வளைத்தலஙகளில் நம்முடைய சமயத்தை குறித்து வெளிவரும் அவதூறான காணொலி மற்றும் கருத்துக்களை பகிராமல் இருந்தால் சிறப்பாக இருக்கும். காரணம் பல்லின மக்களும் உலாவி வரும் இந்த சமூக வளைத்தலத்தில் நம்முடைய சீர்கெடுவது குறித்த பதிவுகளால் நமக்கு நாமே அவலநிலையை கொண்டுவருவதற்கு சமானமாக அமைகிறது. ஆகவே வேண்டி கேட்பது ஒன்றே ஒன்று தான், நல்ல பதிவுகளையும், பயன்மிக்க கருத்துக்களையும் பதிந்தால் சிறப்பாக இருக்கும் என்பதனை இதன் வழி தெரிவித்துக் கொள்கிறேன்.

விருச்சத்தின் நிழலில்,
விக்ரமன் பொன்ரங்கம்

Friday, 6 March 2020

திறமைக்கு மதிப்பளியுங்கள்!


சமீபத்தில் நான் பார்த்த ஒரு திரைப்படம் என்னை நெகிழ வைத்ததோடு, உண்மையும் வரக் கூடிய காலங்களில் நம்முடைய இளைய சமூகம் சீர்கேட்டு பிரச்சனைக்கு ஆளாகமல் சரியான வாழ்க்கையை தேர்வு செய்து செல்ல வழிகாட்டுதலாக அமைந்திருந்த திரைக்கதை. சிவகார்த்திகேயன் நடிப்பில் பி.எஸ்.மித்ரன் அவர்களது இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் ஹிரோ. கல்வியில் சிறந்த அடைவுநிலை பெறாது போகும் இளம் மாணவர்களுக்குள் உள்ள தனித்திறனை வெளிப்படுத்தி அவர்களாலும் முடியும் என்ற ஊக்கத்தை கொடுக்கும் வகையில் அமைந்த கதை. திரைப்படத்தில் நாம் கண்ட காட்சிகளை ஒரு தரப்பில் சிந்தித்து பார்த்தால் நிஜத்தின் நிழல்களாகவே தோன்றும். 

இது போன்ற கதை அம்சத்தோடு காலத்திற்கு ஏற்ப ஒரு திரைப்படம் வெளியாகி கொண்டுதான் இருக்கிறது. அவற்றில் சில நண்பன், தோனி என்ற படங்கள் திரைக்கு வந்த சில காலம் வரை தான் அதன் பாதிப்பு நம்மை தாக்கியிருக்கிறது. பின்னர் படம் பழைமையடைந்ததும் நாமும் வழக்கம் போலவே வேதாளம் முறுங்க மரம் ஏறிய கதையாக போய்விடுகிறோம். திரைப்படங்கள் பாதிப்பால் எத்தனையோ தீய பழக்க வழக்கங்கள் நம்மை விட்டு நீங்காது உள்ளது; ஆனால் நல்லவையை எடுத்து சொல்லக் கூடிய பாதிப்பு நமது செவிகளுக்கும் அறிவுக்கும் எட்டாமலே போய்விடுகிறது.
எத்தனையோ பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் திறமையை கண்டறியாது, 

படி படியென்று பாடங்களிலும் தேர்வுகளிலும் மட்டுமே தங்களது பிள்ளைகளின் கல்வி திறனை மதிப்பிடு செய்கின்றனர். ஆனால் கல்வியால் சிறந்த அடைவு நிலையை கொண்டு வர முடியாத சூழலில் இருக்கும் மாணவர்களுக்குள் விளையாட்டிலோ, தொழில் திறனிலோ, இசை, நடனம், வரைதல் போன்ற கலைச் சார்ந்த துறைகளிலோ தனி திறமைகளானது ஒழிந்திருக்கும். அவற்றில் ஆர்வமானது மிகுதியாகவே காணப்படும். 
பெற்றோர்கள் ஒரு நிமிடம் தங்களை நீதி வழக்கு கூண்டில் நிறுத்திக் கொண்டு பின்வரும் கேள்விகளுக்கு விடையளித்து பாருங்கள்,

1. என்னுடைய மகன் / மகள் உடைய தனி திறமையானது எது?
2. என்னுடைய பிள்ளைகளிடத்தில் என்றாவது நான் நண்பனாக மாறி மனம் விட்டு பேசியது உண்டா?
3. எப்போதாவது நான் அவர்களை ஊக்குவித்துக் கொண்டே இருந்தது உண்டா?
4. என் பிள்ளைகளின் விருப்பத்தை அறிந்து செயலாற்றியது உண்டா?

இதன் விடைகளே, உங்களது பிள்ளைகள் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பை மதிப்பீடு செய்யும். காலங்கள் மாறி கொண்டு வருகிறது, இப்பொழுதெல்லாம் பெற்றோர் முன்பை போல இல்லை, தவறாக குறை கூறி இது போன்ற பதிவுகளை பதியாதீர் என்று சொல்லாதீர்கள். காரணமில்லாமல் இந்த பதிவினை நான் பதியவில்லை. காலங்கள் மாறி வரலாம். ஆனால் சிந்தனை மாற்றங்கள் மட்டும் இல்லாமலே போய்விட்டதே.

இன்று பள்ளிகளில் ஒழுக்கப் பிரச்சனைகள் வருவதற்கு காரணம் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளிடத்தில் மனம் விட்டு பேசாது போனதே காரணமாகவுள்ளது. தேர்வு என்பது ஒரு காகித மதிப்பிடே, அதற்கு எவருடைய திறமையை காண இயலாது. வாழ்க்கையில் வெற்றி பெற கல்வியறிவு மட்டும் போதாது, திறமையென்பதுவும் அவசியம். 
தற்சமயம் SPM / STPM தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்களை மட்டுமே பாராட்டி கொண்டிருக்கும் இந்த ஊடகத்துறை சிறந்த அடைவுநிலை பெற்ற மாணவர்களையோ, அல்லது சிறந்த தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கோ ஊக்குவிப்பு வழங்க தவறிவிட்டது.  பெற்றோர்கள் இந்த தருணத்தில் தங்களது பிள்ளைகளுக்கு ஆறுதலாகவும் முழு பலமாகவும் இருந்து அவர்களுக்கு சிறந்த வழிக்காட்டுதலை வழங்க வேண்டும் என்பதே இந்த பதிவில் என்னுடைய ஆழ்ந்த கருத்தாகும். 

அப்துல் கலாம் ஐயா அவர்கள் இந்தியாவில் பிறந்த இளைஞர்களுக்கு மட்டும் தம்முடைய கருத்துக்களை பதிவு செய்யவில்லை. உலகெங்கும் பறந்து கிடக்கும் தமிழின மக்கள் யாவருக்குமே பதிவு செய்வித்த கருத்தாகும். 
ஆக சிறந்த சமுதாயத்தை உருவாக்க இன்றே விதைகளை விதைப்போம்.

விருச்சத்தின் நிழலில், 

விக்ரமன் பொன்ரங்கம்
07/03/2020

மறந்து போகும் தமிழ் சான்றோர் - வ. உ. சிதம்பரம் பிள்ளை

  வ. உ. சிதம்பரம் பிள்ளை வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார். அவர், 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் இந்த...