கற்றுணை பூட்டியோர் கடலினிற் பாய்ச்சினும்
நற்றுணையாவது நமச் சிவாயவே
திருமுருக பெருமானின் விழாக்களிலும் சரி விரதங்களிலும் சரி முருகன் அடியார்களுக்கு மிகப் பெரிய பக்தியை தரவல்லது என்றால் அது கந்த சஷ்டி விரதமே ஆகும். சூரபத்மனை சம்ஹாரம் செய்விக்கும் உன்னத திருநாளே இந்த கந்த சஷ்டி விரதமாகும். இந்த பதிவில் நான் இந்த விரதத்தினை அனுஷ்டிக்கும் முறையினை பற்றி விளக்குகிறேன் பின்னர் தொடர்ந்து வரக்கூடிய பதிவுகளில் இவ்விரதத்தின் மற்றும் பல சுவை மிகுந்த செய்திகளை பகிர்கிறேன்.
பொதுவாகவே கந்த சஷ்டி விழா திருசெந்தூர் முருகன் ஆலயத்திலே மிகவும் விமரிசையாக கொண்டாட படுவதோடு சகல முருகன் திருத்தலங்களிலும் ஆறு நாட்களுக்கு விசேஷமாக நடத்துவது வழக்கம். இந்த விரத்தினை அனுஷ்டிப்போர் உண்ண நோன்பினை மேற் கொள்ள வேண்டும் என்பது விரத முறையின் கோட்பாடு. இருப்பினும் முடியாத பட்சத்தில் உள்ளவர்கள் புலால் உண்ணாது மரக்கறி உணவினை உட்கொண்டு கடைப்பிடிப்பது மிக அவசியம். இதுவே விரதத்தின் முதல் கட்டு. கட்டு என்பது நம்மை ஒழுக்க நெறிக்குள் கட்டுப்படுத்தி கொண்டு இருப்பது.
ஒரு கட்டுப்பாட்டுக்குள் நம்மையும் நமது மனத்தினையும் வைக்காவிடில் ஒழுக்கம் தவறிய வாழ்க்கையை வாழ்வதோடு பல இன்னல்கள் நம்மை சூழ்ந்து கொள்ள நாமே வழிவிட்டதாக போய்விடும். விரத காலங்களில் புலால் உண்ணாதிருக்க வழியுருத்து வதன் முக்கிய நோக்கம் யாதெனில் ஒர் உயிரை கொன்று அதனை புசிப்பதென்பது நமது சமயத்தில் சொல்லப்படாத கூற்றாகும். இது பக்தி நெறிமிக்க ஒரு இந்துவுக்கு பொறுந்தாத ஒன்றாகும்.
ஆக இந்த கந்த சஷ்டி விரதத்தின் போது உடலை வருத்திக் கொண்டு யாரையும் விரதம் இருக்க இறைவன் ஆணையிடவில்லை. இருந்த போதிலும் கந்த சஷ்டி விரதம் மற்ற விரதங்களுக்கு எல்லாம் அப்பால் சற்று மாறுப்பட்டதாகும். இந்த விரத்தினை பல்வேறு வகையாக அனுஷ்டிக்கலாம்.
- விரதம் துவங்கும் முதல் நாள் காலை பக்தியோடு நீராடி காலையில் பால் பழம் உண்ட பின்னர் தொடர்ந்து ஆறு நாட்களுக்கு உணவு ஏதும் இன்றி இருப்பது ஒருவகை விரதம்.
- பால் பழம் தவிற வேறு ஆகாரம் இன்றி இருப்பது ஒருவகை விரத முறையாகும்.
- இன்னும் சிலர் மிளகு விரதமும் இருப்பர். முதல் நாள் ஒரு மிளகு சாப்பிட்டு விட்டு தண்ணீர் அருந்துவர், வேறு ஆகாரம் ஏதுமில்லை. பின்னர் இரண்டாம் நாள் இரண்டு மிளகு நீர். இவ்வாறு நாளின் எண்ணிக்கையில் மிளகினை உண்டு தண்ணிர் மட்டுமே அருந்தி விரதம் கடைப்பிடிப்பர்.
இவ்வாறு ஐந்து நாட்களுக்கு விரதம் இருந்து ஆறாவது நாள் கந்த சஷ்டி விரத்தின் போதாவது முடிந்த வரை உண்ணா நோன்பிருப்பது வெகு சிறப்பாகும். மாலையில் சூரன் சம்ஹாரம் செய்த பின்னர் பால் பழத்தினை உட்கொள்வது உகந்தது ஆகும்.
விருச்சத்தின் கீழ்,
விக்ரமன் பொன்ரங்கம்
No comments:
Post a Comment