Tuesday, 24 October 2017

கந்தருக்கு அலங்காரம் – Kantharukku Alangaram by Vickraman Ponrangam


அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ், கந்தர் அந்தாதி, சேவல், மயில், வேல் விருத்தம்,கந்தர் அநுபூதி ஆகியவற்றை விட மனம் உருகி இத்துணை பெருமிதம் உடையவனா முருகன் என்று நம்மை வியப்பில் ஆழ்த்தும் வல்லமை கொண்டது கந்தலரங்காரம் என்று சொல்லாம். அழகு தமிழால் அழகுக்கு அழகு சேர்க்கும் கோவையே இப்பதிகமாகும். காரணம் திருப்புகழோ பதினாராயிரம் பாடலுக்கு மேற்ப்பட்டது. அதில் வருணிக்கமலா இதில் வருணித்துள்ளார் என்றால் ஆம் என்னும் பதில் ஒன்றே வரும். சங்க இலக்கியத்தில் புதிய பரிமாண தோற்றத்தை கொடுத்தவர் அருணகிரிநாதர்.

காப்பியங்களை கவிதைகளாகவும், பாடல்களாகவும் கொடுத்து நம்மையும் ஒரு கவிஞராக உருமாற்றும் சக்தியை புகட்டியே இவற்றை வழங்கியுள்ளார் என்பதுவே உண்மை.
"அடல் அருணைத் திருக்கோபுரத்தே அந்த வாயிலுக்கு
வட அருகில் சென்று கண்டுகொண்டேன் வருவார் தலையில்
தடபட எனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்
கடதட கும்பக் களிற்றுக்கு இளைய களிற்றிணையே."
இக்காப்பு செய்யுளின் துவக்கத்திலேயே திருவண்ணமலை அருணச்சலஸ்வரர் ஆலயத்தை வருணித்து அங்கு குடியிருக்கும் பிள்ளையாருக்கு நடைப்பெறும் சிறப்பு வழிப்பாட்டினையும் பக்தர்கள் பிராத்திக்கும் விதத்தையும் அழகாக சிறுப் பிள்ளைக்கு சொல்வது போல் குறிப்பிட்டிருப்பது எவ்வளவு அருமையாகவுள்ளது. முதல் பாடலிலே இவ்வளவு சிறப்பு என்றால் முழு கந்தரலங்காரமும் எத்துணை சுவை அடங்கியிருக்கும்.

மேலும் முருகப் பெருமானின் திருவருளை உண்மையாகவும் உளமாரவும் உணர்ந்தோர்க்கு ஏற்படும் பேரின்பத்தை அருணகிரியார் எப்படி கூறுகிறார் தெரியுமா?

"பெரும் பைம் புனத்தினுள் சிறு ஏனல் காக்கநின்ற பேதை கொங்கை
விரும்பும் குமரனை மெய் அன்பினால் மெல்லமெல்ல உள்ள
அரும்பும் தனி பரம ஆநந்தம் தித்தித்து அறிந்த அன்றே
கரும்பு துவர்த்து செம் தேனும் புளித்து அறக் கைத்ததுவே."
என்ற இப்பாடலின் வழி வள்ளியம்மை மீது அளாதி பிரியம் கொண்டிருக்கும் முருகனின் அன்பை நாம் உணர்ந்து விட்டோமானால், சுவை மிகு கரும்பும் துவரக்கும், தேவமிர்த இனிப்பை போன்ற தேனும் புளித்து போகுமாம்.
திருவருளைப் பற்றி குறிப்பிடும் அருணகிரியார் நம்மை சூட்சுமமாக மூடர்கள் என்று திட்டாமல் திட்டுகிறார் இனி வரும் பாடல் வரிகளில்.
"அழித்துப் பிறக்கவொட்டா அயில் வேலன் கவியை அன்பால்
எழுத்துப்பிழை அறக் கற்கின்றிலீர்கள் எரி மூண்டது என்ன
விழித்துப் புகை எழப் பொங்கு வெம் கூற்றன் விடும் கயிற்றால்
கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கும் அன்றோ கவி கற்கின்றதே"
என்ற பாடல்களின் வழி கூற வருவது என்னவென்றால், இவ்வுடலில் உயிர் இருக்கும் போதே, இவ்வுடல் சகல ஆரோக்கியத்துடன் இருக்கும் போதே, தீவினைகளை அழித்து முக்தியை தரவல்ல வேலினை கொண்டிருக்கும் ஞான வேலினை தாங்கிய வண்ணம் அருள்பாலிக்கும் திருமுருகப் பெருமானை புகழாமல், எமன் பாசக் கயிற்றை வீசி இவ்வுயிரை இழுத்து செல்லவிருக்கும் காலத்தில் அவற்றை படிப்பதால் யாது பயன் என்கிறார்.

அதுமட்டுமா,
தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் தானம் என்றும் இடுங்கோள் இருந்தபடி இருங்கோள் எழு பாரும் உய்யக் கொடும் கோபச் சூர் உடன் குன்றம் திறக்கத் தொளைக்க வைவேல்
விடும் கோன் அருள்வந்து தானே உமக்கு வெளிப்படுமே."
என்ற பாடலின் மூலம் நாம் நமது மனத்தையும் ஐம்புலனையும் அடக்கி, ஏழைகளுக்கு தானம் கொடுத்து நாம் உண்டு நம் வேளை உண்டு என்றுயிருந்தால் கொடிய சூரபத்மனை அழித்த சுப்ரமண்ய சுவாமியின் திருவருளை தானாகவே பெற்றிடலாம் என்கிறார்.
மேலும், நாளும் கோளும், முருகன் அருளிருந்தால் ஒன்றும் நம்மை செய்யாது என்று
நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த
கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே"
இப்பாடலின் வழி நம்மை தெளிவடைய செய்கிறார்.

ஆகவே இறுதியாக குமரக்கடவுளின் பெருமைதனை உரைக்கும் இப்பாடல்களை வாசித்தாலோ, பாராயணம் செய்தலோ அத்துணை நன்மைகளை தரவல்லது. பக்தி இலக்கியம் என்று பாராமல் படித்தால் கந்தரலங்காரமாகட்டும், திருப்புகழகட்டும் இவை தமிழுக்கு கிடைத்த பொக்கிஷமாகும்.

Friday, 22 September 2017

சம்ஹாரம் Samharam - மனிதனுள் இருக்கும் அரக்கனை அழிப்போம் Kill The Human Ashura

இந்து பெருமக்களின் விஷேச காலங்களின் அடிப்படையில் இன்று  நாடு தழுவிய அளவில் நாம் நவராத்திரி பண்டிகையை ஒன்பது நாட்களுக்கு கொண்டாடி கொண்டிருக்கிறோம். நவராத்திரியின் முக்கிய அம்சமே அம்பிகையின் ஒன்பது அவதாரங்களை பூஜித்து பத்தாவது நாளாக விஜய தசமியன்று மஹிஷசுரனை வதம் செய்யும் காட்சியை தொழுவதே ஆகும். மூன்று நாட்களுக்கு துர்க்கையாக, மூன்று நாட்களுக்கு லட்சுமியாக, மற்றும் மூன்று நாட்களுக்கு சரஸ்வதியையும் வழிப்படுவது வழக்கம்.

இந்த நவராத்திரி விழா பல உள் அர்த்தங்களை அடக்கியவை. ஆனால் அது பலருக்கும் தெரியாதவொன்று. நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்க்கையம்மனை வழிப்படுகிறோம். துர்க்கையம்மன் என்பவர், வீரத்தினை தந்து நம்முள் இருக்கும் சோம்பலை அகற்றுபவர். அம்பிகை நம்மிடம் இருக்கும் தமோ குணத்தினை இங்கு அகற்றுகிறார். சித்தாந்தரிதியாக சொன்னால் நம்முள் இருக்கும் மும்மலங்களாகிய ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றை போக்குகிறார்.

அதனை தொடர்ந்து, வரும் மூன்று நாட்களில் மகா லட்சுமி தேவியை வழிப்படுகிறோம். லட்சுமி தேவி செல்வத்தின் அதிபதி என்பது நாம் அறிந்தவொன்று. ஆனால் லட்சுமி தேவி நமெல்லாம் நினைப்பது போல் அவர் பணம் படைக்கும் தெய்வம் அல்ல. புகழ், மரியாதை, அன்பு, தனம், தானம், தான்யம் ஆரோக்கியம் ஆகிய செல்வங்களை வழங்குபவர். இந்த மூன்று நாட்களில் மகா லட்சுமி நம்முடைய இராஜச குணத்தை அழிக்கிறார். பேராசை, நம்மை பிடித்திருக்கும் பிணிகள் அனைத்தையும் அழித்துவிடுகிறார். அடுத்ததாக கல்வியின் அதிபதி சரஸ்வதி தேவிக்கு உகந்தவையாக இறுதி மூன்று நாட்கள் அமைகிறது. அன்று சரஸ்வதி தேவி நமக்கு சாத்விக குணத்தை அருளுகிறார். ஆக நவராத்திரியின் பத்தாவது நாளாக விஜய தசமியை நாம் கொண்டாடுகிறோம். அன்று முப்பெரும் தேவியர்களும் ஒன்று சேர்ந்து ஆதிபாரசக்தியாக உரு கொண்டு, மஹிஷசுரனை சம்ஹாரம் செய்கிறார்.

அன்பர்களே, பல யுகங்களுக்கு முன்பே அன்னை பராசக்தி மஹிஷசுரனை சம்ஹாரம் செய்துவிட்டார். பின் எதற்காக ஆண்டு தோறும் நாம் ஆலயங்களில் இந்த வழக்கத்தினை பின்பற்றி கொண்டிருக்கிறோம்? காரணம் அவ்வசுரனின் சாபம் நம்மை விடாது பிடித்து கொண்டு தான் வருகிறது. அச்சாபம் என்னவென்று தெரியுமா? பிறர் உடமைகள் மீது ஆசை கொள்ளுதல், ஆணவத்தில் முழ்கிவிடுவது, பேராசை, சுயநலம், குறிப்பாக நான் என்ற அகந்தை கொள்வது, என்று நம்முள் அரக்கன் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறான். அவனை அழித்து இந்த ஆன்மாவிற்கு தூய்ம்மையை கொடுப்பதே சம்ஹாரத்தின் தத்துவம்.

இப்புனித நாட்களில் நாம் அம்பிகையிடத்தில் எதை பிரார்த்திக்க வேண்டும் என்று அபிராமி பட்டர் அந்தாதியாக சொல்லியிருக்கிறார். அவை பின்வருமாறு

கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கபடு வராத நட்பும் கன்றாத வளமையும்
குன்றாத இளமையும் கழுபினியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தனாமும் தாளாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கோடையும்
தொலையாத நீதியும் கோணாத கோளும்
ஒரு துன்பமில்லாத வாழ்வும், உதவி பெரிய கொண்டரோடு கூட்டு கண்டாய்
ஆளயாலில் அறிதுயிலும் மாயானது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே அமுதிசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே.

இதை கேட்டாலே போதும் அவள் நமக்கு நிச்சயம் தருவாள். கேட்பதை நாம் கேட்டுவிட்டோம். உமையவள் எதை நமக்கு கொடுப்பாள் தெரியுமா? அதையும் பட்டர் நமக்கு சொல்லித் தான் சென்றார். அவை பின்வருமாறு
தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வு அறியா
மனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே--
கனம் தரும் பூங் குழலாள், அபிராமி, கடைக்கண்களே
ஆக இறைவனிடத்தில் நாம் கேட்பது இதனை தான் அவன் தருவதும் இதனை தான். இதையே தான் வள்ளாலரும் நம்மிடத்தில் வலியுறுத்துகிறார். அவை பின்வருமாறு
ஒருமையுடன் நின்திரு மலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் உறவு களவாமை வேண்டும்
பெருமை பெற நினது புகழ் பேச வேண்டும்
பொய்மை பேசதிருக்க வேண்டும்
பெரு நெறி பிடித்தொழுக வேண்டும்,
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்.
மருவு பெண்ணாசை மறக்கவே வேண்டும், உன்னை மறவாதிருக்க வேண்டும்
மதி வேண்டும், நின் கருணை நிதி வேண்டும்
நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்
தர்மம் மிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர் தளம் ஒங்க கந்த வேலே
தன்முகத் துய்யமணி உன்முக சைவமணி சண்முக தெய்வமே.

என்று அவரும் தெளிவுபடுத்தி தான் சென்றுள்ளார்.

ஆக இறைவனிடத்தில் கேட்க வேண்டியவற்றை முறையாக கேட்க வேண்டும். அத்தோடு நம்முடைய வழிப்பாட்டின் தத்துவங்களை அறிந்து வழிப்படுவது சிறப்பு. அதுமட்டுமின்றி, நமக்கு தெரிந்தவற்றை நமது பிள்ளைகளுக்கு போதித்தல் அவசியம். நம்முடைய பண்பாட்டை அழிவிற்கு கொண்டு போகாமல் அவற்றை நம் சந்ததியினருக்கு போதித்து வளர்ப்போம்.


Thursday, 14 September 2017

Blue Whale Game - நீல திமிங்கிலம்


இன்று நாட்டையே பயத்தில் ஆழ்த்தி கொண்டு பரவலாக பரவி கொண்டு வரும் உயிர்க் கொள்ளியான இணையத்தள விளையாட்டு நீல திமிங்கிலம். இளைஞர்களையும், குழந்தைகளையும் தற்கொலைக்கு துண்டும் அதிபயங்கரமான விளையாட்டாகும். இந்த விளையாட்டு 50 சவால்களை கொண்டது. இதை விளையாடுவோர் ஒவ்வொரு சவால்களையும் நிறுத்தாமல் தொடர்ந்து கட்டாயமாக விளையாடிட வேண்டும் என்பது இதன் விதிமுறைகளில் ஒன்று. இவ்விளையாட்டு பெற்றோரின் கவனிப்பு குறைந்தவர்களையும், அன்புக்காக ஏங்கி கொண்டிருப்போரையுமே தாக்கி விளையாட செய்யும்.
இனி இந்த விளையாட்டைப் பற்றி விரிவாக பார்ப்போம். இந்த விளையாட்டு, dowloadable game, application and software இல்லை. இவை ரகசியமாக பரவி வரும் குழுமங்களின் வழி விளையாடப்படுபவை. இவ்விளையாட்டின் துவக்கமாக russian social media network -ல் முதன் முதலில் கண்டறியப்பட்டதாக ஒரு கட்டுரை நமக்கு சான்றாக கிடைப்பெறுகிறது. இதில் 50 சவால்கள் அடங்கியிருக்கும். அவற்றில் அதிகாலை 4:20 எழுந்து பேய் படம் பார்ப்பதும், கைகளை அறுத்து கொள்வது, குடும்பம் நண்பர்களிடமிருந்து தனித்திருப்பது, மலை உச்சியிலிருந்து தற்கொலை முற்ப்படுவதுமாகவே இதன் சவால்கள் அடங்கியிருக்கும். ஒவ்வொரு சவால்களுக்கு பிறகும் சவால்களை நிறைவேற்றியதற்கான சான்றுகளை காண்பிக்கும் வகையில் படம்பிடித்து பதிவேற்றம் செய்தல் அவசியம்.
இந்த விளையாட்டில் பங்கு கொள்வதற்கு முன்பதாக நம்மை பற்றிய தகவல்களை பற்றி முழுமையாக நம்மிடமிருந்து பெற்று கொள்ளும். அதன் பின்னர் தான் நமக்கு ஒவ்வொரு சவால்களாக கொடுக்கப்படும். இதன் நோக்கமே நம்முடைய மரணம். இதில் இருக்கும் சவால்களை பூர்த்தி செய்ய முடியாது நாம் பின் தங்கினால் நம்மை பற்றிய விஷயங்களை காட்டி பயமுறுத்தும் என்றும் சொல்லப்படுகிறது. ஒரு ஆய்வின் கீழ் வெளிவந்த தகவலின் படி நூற்றுக்கும் மேற்பட்டோர் தற்கொலையில் ஈடுப்பட்டுள்ளனர் என்று தெரிய வருகிறது.
நம்மை சுற்றியிருக்கும் சிறுவர்களோ, தம்பி தங்கைகளோ, நண்பர்களோ இந்த விளையாட்டில் ஈடுப்பட்டுள்ளனர் என்பதை நாம் எப்படி அறிந்து அவர்களை அதிலிருந்து மீட்டு வருவது?
உங்களோடு சேர்ந்து இருப்போர்களின் மீது உங்கள் கவனத்தை செலுத்துங்கள். அவர்களின் நடவடிக்கையின் மீது சந்தேகியுங்கள். தனிமையிலிருப்பது, உடலில் வெட்டு காயங்களுக்கான அடையாளங்கள் இருப்பது போன்றவையை கண்காணியுங்கள். அப்படி இந்த விளையாட்டால் பாதிக்கப்பட்டிருந்தால் உடனே காவல் அதிகாரியிடம் புகார் கொடுப்பதும், மனோதத்துவ நிபுணரிடம் ஆலோசனைகள் பெறுவதும் சிறந்த தீர்வுகளாகும்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது அதிக கண்காணிப்பு கொள்வது அவசியம். பிள்ளைகள் இந்த விளையாட்டில் அதிகமான கவனத்தை செலுத்துகின்றனரா என்பதை கண்காணிப்பது மிகவும் முக்கியம். அப்படி அவர்கள் மீது  உள்ள சந்தேகம் உறுதியானால் வீட்டில் உள்ள இணையத்தள இணைப்பை ரத்து செய்யுங்கள். அவர்களை அந்த விளையாட்டின் தக்கத்திலிருந்து மீட்க முயற்சியுங்கள்.
2015 - ஆம் ஆண்டு இந்த விளையாட்டை கண்டு பிடித்த நபர் பிடிப்பட்டார். அவரை விசரித்த போது அவர் சொன்னதாவது, "இந்த உலகை தூய்ம்மைப் படுத்துவது தான் என் நோக்கமாகும்" என்றார்.
இறுதியாக இப்பதிவின் வழி கூற வருவது  என்னவென்றால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தத்தம் கவனிப்பிலிருந்து விடுப்படமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுதல் வேண்டும். இது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுப்படாமல் இருக்க நம்மை நாம் தயார் செய்து கொள்ள வேண்டும். நமக்கு பயனலிக்கும் வகையிலான காரியங்களுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும். இதுவே சரியான தீர்வாகும்.


Wednesday, 13 September 2017

இந்து சமயத்திற்கு ஏன் இத்துணை துயரங்கள்

சமீபத்தில் வளைத்தளங்களில் அடியேன் கண்டு அதிர்ச்சியுற்ற சம்பவம் ஒன்றை இங்கு பகிர்கிறேன். பக்தியேன்ற பெயரில் பலரும் பல விதமாக தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தி வந்தாலும் அவற்றில் சில நம் சமயத்தை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதை கண்டு மனம் வேதனை கொள்கிறது. இப்பொழுது நான் கண்ட சம்பவத்தை பற்றி சொல்ல வேண்டுமானால் பெண்கள் தங்களை அம்மனின் சொரூபமாக மாற்றி கொண்டு அங்காரமாக கூச்சலிட்டு கொண்டும் பக்தர்களுக்கு அருள்பாளிக்கின்றனர்.
பெண்கள் பொதுவாக அம்மனுக்கு ஒப்பானவர்கள் தான் அதில் என்ற மாற்றமும் இல்லை. ஆனால் இவர்கள் நடந்து கொள்ளும் செய்கையை பார்த்தால் நம் சமய நம்பிக்கைக்கு அவமானத்தை ஈட்டித்தருவதாக இருக்கிறது. நாம் கற்றும் முட்டாள்களாக திரிகிறோமோ? அன்பின் வழி இறைவனை அடைந்திட தான் நம் சமயக் குரவர்கள், நாயன்மார்கள், மற்றும் அருளாளர்களும் போதித்துள்ளனர். பெரியப்புராணத்தில் கூட நாயன்மார்கள் இத்துணை பக்தியில் தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தவில்லை.
காலங்களின் தாக்கத்தால் மூடர்களின் அர்த்தமற்ற போதனைகளால் இது போன்ற காரியங்கள் இன்னும் நமது சமுதாயத்தில் நடந்து கொண்டு தான் வருகிறது.
இதுமட்டும் தான் சமயத்தை சீர்குழைய செய்கிறது என்பது  என் கருத்து அல்ல. இன்னும் பல உண்டு. பைரவர் வழிப்பாடு என்று காய்கறிகளால் விளக்குகள், குரு வழிப்பாடு என்று பண மோசடி, கடவுளுக்கு நிகரான யாக வேள்வி வழிப்பாடுகள், ஜோதிட பரிகாரங்கள் என்று இன்னும் பல மூட்டாள் தனமான காரியங்கள் அங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கிறது.



இந்து சமயத்தில் போதிக்கப்பட்ட வழிப்பாட்டு முறைகள் அத்தனையும் விஞ்ஞானத்திற்க்கும் மெய்ஞ்ஞானத்திற்க்கும் ஒத்து போகும் வகையில் அமையப் பெற்றவை. இன்றும் விஞ்ஞானிகளும், அறிவியல் நிபுணர்களும் நமது சமய சம்பிரதாயங்களை ஆராய்ந்து அவை உலகிற்கு எல்லா காலங்களிலும் பல நன்மைகளை வழங்க கூடியதாகத்தான் உள்ளது என்று சான்றுகள் காட்டப்பட்டு வருகிறது. அப்படியிருக்கும் பட்சத்தில் மூடநம்பிக்கையில் தோன்றும் சம்பிரதாயங்களுக்கு இவர்களால் தகுந்த விளக்கமளிக்க முடியுமா? மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்று முழக்கமிட்டால் மட்டும் போதாது. அதற்கான முயற்சியில் முழுமையாக இறங்கி செயல் பட வேண்டும். உண்மையான பக்தி மார்க்கத்தை முழுமையாக கைப்பற்றல் வேண்டும். சனதான தர்மத்தை தெளிவுப்படுத்தி கொள்ள முற்ப்படுவது அவசியமாகிறது. சரியான இந்து சமயத்தை கற்று தெளிந்து விட்டால் எவராலும் நம்மை மூடர்களாக்கி விட முடியாது என்பதை எப்பொழுதும் சிந்தையில் கொண்டிருப்பது சிறப்பு.

Tuesday, 12 September 2017

வள்ளி திருமணம்



சிவாய திருச்சிற்றம்பலம்

இன்று வரை நாம் அனைவரும் முருக கடவுளை வருணித்து சொன்னால், அவர் இரண்டு மனைவிக்கு சொந்தக்காரர் என்ற ஒரு தவறான கருத்தை தான் முதலில் முன் வைக்கிறோம். ஆனால் முருக கடவுளின் புராண வரலாற்றை சற்று ஆழமாக சிந்தித்து படித்தால் அதில் இருக்கும் எத்தனையோ தத்துவக் கூற்றை அறிய முடியும். என்னுடைய இந்த பதிவில் வள்ளி திருமணத்தை பற்றியும் அதிலிருக்கும் தத்துவங்களை நான் கற்ற வரை சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இன்றைய காலத்திற்கு ஏற்ற கருத்துக்களை அன்றே நமது முன்னோர்கள் சொல்லி விட்டு சென்றிருந்தாலும் நாம் அவற்றை பின்பற்றமலே போய் விட்டோம் என்று தான் சொல்ல வேண்டும்.
எடுத்துக்காட்டாக ஒரு புராண வரலாற்றை இங்கு சொல்கிறேன். திருவிளையாடற் புராணத்தில் சிவப் பெருமானே எழுதிய பாடல் ஒன்றுக்கு நக்கீரர் பொருள் குற்றம் இருந்த காரணத்தினால் பாட்டில் பொருள் குற்றம் உள்ளது என்று வாதிட்டார். பெருமான் இல்லையென்று வாதித்தாலும் நக்கீரர் குற்றம் குற்றமே, நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று தம் முடிவில் உறுதியாகவே இருந்தார்.
இதில் நாம் அறிவது என்ன தெரியுமா?
இறைவனே குற்றம் செய்தாலும், குற்றம் குற்றம் தான். அவன் இறைவன், அவன் செய்தது சரி என்று வாதிப்பது சரியல்ல, என்ற தத்துவத்தினை முன்வைத்தனர் நம் முன்னோர்கள். ஆனால் இன்று லஞ்சம் என்ற பெயரில் பல உண்மைகள் முடி மறைக்கப்பட்டு தான் வருகிறது. எவ்வளவு தான் மறைத்தாலும் ஒரு நாள் உண்மைகள் வெளி வரத் தான் செய்யும் என்பதில் எந்தவொரு ஐயமுமில்லை.

மேலே கூறிப்பிட்டது போல் வள்ளி திருமணத்தின் தத்துவங்களையும் கற்று தெளிதலை அவசியமாக கொள்ளுதல் வேண்டும். இனி புராண வரலாற்றை பார்ப்போம்.
வள்ளி பிராட்டி என்பவர் ஒரு மானுக்கு பிறந்த பெண் குழந்தை. அதுவும் மனித உடலோடு பிறந்த குழந்தை. பிறந்த குழந்தை தன்னுடையதல்ல என்று மான் இருந்த இடத்திலே குழந்தையை விட்டு போய் விட்டது. அதை கண்ட வேடுவர் குலத்தோன் அந்த  குழந்தையை தன் குழந்தையாக பேணி காத்து வளர்த்தார். முருக பெருமானுக்கு பூலோக மங்கையான வள்ளியின் மீது காதல் வயப்பட்டது. வேடுவனாக சென்று வள்ளியிடம் தன் காதலை சொன்னான், ஏற்று கொள்ளவில்லை. வயது முதிர்ந்த வயோதிகனாக வந்து அண்ணன் ஆனை முகன் துணையோடு  மணக்கலனார், என்பது நாம் அறிந்த புராண வரலாறு. இங்குதான் நாம் சற்றே சிந்திக்க வேண்டும். முருக பெருமான் எல்லா ஆற்றலையும் கொண்டவன். ஆசை, மோகம், பேராசை அனைத்திற்க்கும் அப்பாற்ப்பட்டவன். அவனுக்கு எப்படி இந்த காதல் வசப்பட்டது. அதுவும் ஒரு தெய்வத்திற்கு பூலோக மங்கை மீது எப்படி ஆசை வந்திருக்கும்.
அதுமட்டுமல்லாது, முருகனை புகழும் திருப்புகழிலும், வள்ளியின் மீது முருகனுக்கு இருக்கும் மோகத்தை  தான் அருணகிரியார் சொல்கிறார். இது எப்படி?
நண்பர்களே,
வள்ளி என்பவள் பிரதிநிதி. நமக்கெல்லாம் அவர் தான் பிரதிநிதி. அதிலும் முருகன் மட்டும் தான் ஆண்பிள்ளை. ஆனால் நாம் எல்லோரும் பெண்ணால் பெற்றேடுக்கப்பட்ட பெண் பிள்ளைகள். பாலால் ஆண், பெண் என்று வேறுப்பட்டாலும் நாம் அனைவரும் பெண் பிள்ளை தான். ஆக முருக பெருமான் காதல், மோகம் கொண்டிருப்பது நம் மீது தான் என்பதை மறக்கக் கூடாது. முன்பு நான் சொன்னது போல் வள்ளியம்மை நமது பிரதிநிதி. அவன் வள்ளியிடம் காட்டும் அன்பு நம்மிடம் கொள்ளும் காதலாகும்.அதனால் தான் அருணகிரிநாதர் பல இடங்களில் வள்ளியின் மீது முருகனுக்கு உள்ள அன்பையும், காதலையும் சொல்கிறார். இதன் வழி, நம்மிடம் இறைவன் கொண்டுள்ளான் என்பதை உணர முடியும். அப்படி வள்ளியம்மையை போற்றும் வரிகளை நாம் இங்கு பார்ப்போம்.
1.         வள்ளியம்மை தவிர வேறு தஞ்சம் தமக்கு இல்லை என்று முருகவேள் தமது வேளையை (பொழுதை) அம்மையாருக் கென்றே போக்கினார் என்று          - திருப்புகழ் 1000
2.         உன் குழை ஒழையை தா. அந்த ஒழையில் உன் கண்கள், தனங்கள் முதலியவற்றால், நான் மனந் தளர்ந்து பரிதாப நிலையில் உள்ளேன் என்று சாசனம் (பத்திரம்)  எழுதி தருகின்றோம் என்று வள்ளிப் பிராட்டியிடம் முருக வேள் கூறியது          - 1002
3.         வள்ளியம்மையின் உறைவிடமாம் காட்டுக்கும் ஒர் அடிமை கும்பிடு போடும்படி வள்ளிப்பாற் காதல் மயக்கம் கொண்டார் முருகவேள் என்பது                         - 1151
4.         வள்ளியம்மைக்கு வழியடிமை யான் என்று முருக பிரான் மேருமலையிற் சாசனம் எழுதி வைத்தனர் என்பது   -1199
            - அருணகிரியாரும் வரலாறும் நூலாராய்ச்சியும், டாக்டர் வ.சு.செங்கல்வராயப்பிள்ளை
அவர்களின் நூலில் சிறப்பாக சுட்டிக்காட்டியுள்ளார். இவை மட்டுமின்றி முருகப்பெருமான் செய்த மற்றுமொரு காரியம் உண்டு. அதனை அருணகிரியார் அழகு தமிழில் கொஞ்சி சொல்கிறார்.
" பாகு கனிமொழி மாது குறமகள்
                                                            பாதம் வருடிய                       மணவாளா"

என்ற இந்த ஒரு வரியினால் வள்ளி முருகனின் பெருமையை உயர்த்திவிட்டார் அருணகிரியார். கழைப்பால் துயல் கொண்டிருந்த வள்ளிக்கு பாதம் பிடித்துவிட்டு பணிவிடை செய்வதாக பொருள்படும் இவ்வரிகளில் முருக கடவுள் நம்மிடம் கொண்டிருக்கும் அன்பினை எவ்வளவு எழிமையாக சொல்லியுள்ளார்.

இதன் வழி நாம் அறிவது என்னவென்றால் இறைவன் என்பவன் எல்லா நிலைகளிலும் நம்மிடம் அன்பினை செலுத்தி கொண்டு தான் இருக்கிறான். ஆனால் நாம் தான் அவன் பெயரால் தவறுகளையும் பெறும் பாவங்களையும் செய்து உண்ட வீட்டிற்கு தூரோகம் விளைவிப்பதாக நடந்து கொள்கிறோம். வசதிகளும், பதவிபட்டங்களாலும் நாம் உயர்ந்தவர் என்ற எண்ணத்தை விடுத்து ஏழ்மையை கை கொள்ளுவோம். இறைவன் நமக்கென்று கொடுக்க வேண்டியதை தக்க சமயத்தில் தருவான்.

Friday, 25 August 2017

No conversion / ஏன் இந்த மாற்றங்கள் தோழா!

ஏன் இந்த மாற்றங்கள் தோழா!

எவ்வளவு தான் விஞ்ஞானத்தால் நாம் உயர்வு பெற்றுந்தாலும் இன்னும் மெய்ஞ்ஞானத்தால் தெளிவு பெறமலே உள்ளோம் என்பது இன்றைய நடைமுறை வாழ்க்கையில் தினம் தினம்  கண்ணெதிறே பார்த்து கொண்டு தான் இருக்கிறோம். இதற்கு பிறரை குறை கூறுவதை விடுத்து சற்று சிந்தித்தோமானால் புரியும். தவலை எப்படி தன் வாயால் கெடும் என்பரோ அப்படியே நாம் நம்மாலேயே கெடுகிறோம். இத்தொடரில் நான் முக்கியத்துவம் கொடுத்து பேசுவது மதமாற்ற பிரச்சனையை குறித்தே.
இன்று மலேசிய திருநாட்டை பொறுத்த வரையில், மதமாற்ற பிரச்சனைக்கு விடிவில்ல புதிராக தான் உள்ளது. ஒருமுறை நமது தாய் மதத்தை விட்டு மாறிவிட்டோம் என்றால் மீண்டு வர முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட அவளநிலையில் உள்ளனர். நமது இந்து சமயம் என்பது முத்த சமயங்களில் ஒன்று. கல் தோன்ற மண் தோன்ற காலத்தின் மூத்த மொழி தமிழ் மொழி என்று தமிழை உயர்த்தும் போதே நமது சமயமும் மூத்தது தான் என்று தெரிய வருகிறது.
சுதந்திரத்தை அள்ளி கொடுத்த சமயம். எல்லாவுயிர்களிலும், எல்லா இடங்களிலும், நிக்கமற இறைவன் நிறைந்துள்ளான் என்று உரக்க சொன்ன மதம். கலைகளிலும் சமயத்தை புகுத்தியது இந்து சமயம். குடும்பத்தின் மகத்துவத்தை எடுத்துரைக்கும் நமது இந்து மதம். நீர், காற்று, நெருப்பு, நிலம் மற்றும் ஆகாயம் என்னும் பஞ்சபூதங்களிலும் இறைவனை பார்த்தது நமது இந்து மதம்.
எத்துனை பெருமை, புகழ், வியக்கத்தக்க வைக்கும் சம்பவங்கள், வரலாற்றில் மீண்டும் படைக்க முடியாத கலை, கட்டிடங்கள், பாரம்பரியங்கள். எல்லாவற்றிலும் அறிவியலை புகுத்திய பண்பாட்டு சடங்கு முறைகள், மருத்துவ குணதிசயங்கள். ஒரே ஒரு வரியில் அடக்கிட முடியாத கடல். மூழ்கினால் மீள முடியாத ஆளம்.
ஆக இத்துணை பெருமைகளை கொண்ட சமயத்தில் பிறந்து முழுமையாக கற்று தெளியமல் மதம் மாறுவது எவ்வளவு கேவலம் தெரியுமா? மத மாற்றம் என்பது நாம் நம்மை பெற்ற தாயை அல்லது நமது சகோதரியை விலைக்கு விற்பதற்கு சமமான ஒரு கேவலமான செயலாகும். இவ்வளவு கொச்சையாக குறிப்பிட காரணம் வேதனையின் வெளிப்பாடே.
குரு வழிப்பாடு என்ற பெயரில் பண மோசடி, வழிபாடு என்ற பெயரில் அர்த்தமற்ற பிரார்த்தனைகள், என்று நம்மை நாமே இழிவுப்படுத்தி கொள்கிறோம் என்பதனை இன்னும் உணரமலே போய் கொண்டிருக்கிறோம்.
மதமாற்றம் செய்யப்படுவதன் நோக்கம் நம்மை மிதித்து அவர்கள் ஓங்கி நிற்கவே. மேலும், நமது ஏழ்மையை பிறர் பயன்படுத்தி லாபத்தை பார்க்கவும் இச்சம்பவங்கள் நடைபெறுகிறது. இதற்கு அவர்களை மட்டும் தவறு சொல்வது சரியில்லை. நமக்கும் பங்கு உண்டு என்றே சொல்வேன். காரணம் பிற மதத்தினர் நம்மை பொது இடங்களில் சமய கலை கலச்சார நிகழ்வுகளில் படம் எடுத்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் முன்னிலையில் நமது அன்பு வழிப்பாட்டு முறைகளும் விஞ்ஞானமிக்க சடங்கு முறைகளும் தென்படாமல், அகோர ஆட்டங்களும், கவரச்சி மிக்க காட்சிகளும், நமது சமயத்தையும் பண்பாட்டையும் சீரழிக்கும் வகையிலான காட்சிகளுமே தெரிகிறது. இதையே காரணமாக கொண்டு மத போதகர்கள், பிரச்சாரகர்களை அதிகப்படுத்தி மத மாற்றத்தை செய்ய துண்டுதல் செய்கிறர்.

ஆக நாம் நமது சமயத்தின் புனிதத்தை ஒரளவு தெரிந்து வைத்திருந்து இந்துவாக பிறந்தால் இந்துவாகவே மடிய வேண்டும் என்ற உறுதியோடு இருந்தால் எவரும் நம்மை மதமாற்றம் செய்ய துணிய மாட்டார்கள். இறைவழிப்பாட்டில் உறுதியும், சமயத்தின் மீதுள்ள அக்கறையுமே நமக்கு இறுதி வரை துணை புரியும்.  இப்பிரச்சனைகளை கழைய நமது பிள்ளைகளை சிறு வயது முதல் சமயத்தின் மீது அக்கறை கொள்ள செய்தல் அவசியம். ஆலயங்களுக்கு செல்லும் பழக்கத்தையும் சமய சொற்பொழிவுகளில் கலந்து கொள்வது, அன்பான வழியில் இறைவழிபாடு செய்வது போன்றவற்றில் நம்மை ஈடுபடுத்தி கொள்ளுதல் அவசியம். விதைப்பதை சரியாக விதைத்தால் அறுவடை செய்யும் காலத்தில் நல்ல பயனை பெறலாம். இதற்கு முன் நாம் நமது சமயத்தில் செய்ய தவறியவற்றை இப்பொழுது கூட செய்ய துவங்களாம். தடுப்பதற்கு யாருமில்லை.

Thursday, 3 August 2017

ஆலயத்தில் தமிழ் வேதத்திற்கு தடையா?


ஆலயம் என்பது தமிழர்களின் பண்பாட்டு கலைக் கூடகங்களில் ஒன்றாக போற்றப்படுபவை. நமது முன்னோர்கள் மக்கள் நலனுக்காக செய்து வந்த காரியங்களின் துவக்கமே ஆலயங்கள் தான். மேலும் சொல்லப் போனால், கோவில் இல்லாத ஊரில் குடியிருக்காதே என்று சொன்னதற்கு இதுவும் ஒரு காரணமாக தான் அமையும். 
சமயத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தி ஆலயம் அமைக்கப்படவில்லை. பொது மக்களின் வாழ்வியலுக்கும் பயனலிக்கும் நோக்கத்திலே சிற்பங்களாகவும், வழிப்பாட்டுகள் மூலமாகவும் சூட்சமமாக சொல்லி சென்றனர். அதுமட்டுமல்லாது தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் ஆலயங்கள் பல வகையில் பாடுபட்டுள்ளது என்பதில் எந்த காலத்திலும் மறக்கலாகாது.
அப்படியிருக்கும் பட்சத்தில் இன்று அதே ஆலயங்களில் தமிழால் வழிப்பாடுகள் செய்ய ஒரு குறையாகவே உள்ளது. அதுமட்டுமல்லாது தமிழால் பூஜைகள் செய்யும் போது பலரும் அதன் மகிமை உணராது தங்களது வீட்டு பிரச்சனைகளில் முக்கியத்துவம் வழங்கி இன்றும் மூடர்களாய் உள்ளனர். இப்பதிவின் நோக்கம் சமஸ்கிருத மொழியை சாடுவதல்ல. சமஸ்கிருதத்தில் உள்ள மந்திரங்களுக்கு தரும் மதிப்பை தமிழ் வேதம் என போற்றப்படும் திருமுறைகளுக்கும், திருப்புகழுக்கும் தர மறுக்கின்றனர் என்பதே இப்பதிவின் குற்றச்சாட்டு. ஒவ்வொரு ஆலயத்திலும் விஷேச பூஜை நேரத்தில் சமஸ்கிருத மொழியால் பூஜைகள் செய்யும் போது தமிழ் பாமாலை ஒதுவதற்கும் இடமுண்டு. இதனை பலரும் அறிந்த ஒன்று தான் ஆனால் யாரும் அதனை சரியாக பின்பற்றவில்லை என்பது தான் உண்மை.
தமிழ் பாமாலை என்று குறிப்பது திருமுறைகளை தான். சேரன். சோழன், பாண்டியன் காலங்களில் திருமுறைகள் பன்னிரெண்டையும் ஒதியே வழிப்பாடுகள் செய்யப் பெற்றன. அதன் பின், காலத்தின் கட்டாயத்திற்கு ஏற்றவாறு பூஜைகள் செய்யப்பட்டது. அதில் பன்னிரெண்டு திருமுறைகளாக ஒதப் பெற்ற திருமுறை பாடல்களை ஐந்தாக குறைத்து பஞ்சபுராணம் என்ற பெயரில் ஒதினர். பஞ்சபுராணம் என்பவை தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு மற்றும் பெரிய புராணம் என்று வகுத்து கொண்டு ஒதினார்கள். தமிழ் மொழியால் பாடப் பெறும் இத்திருமுறைகள் இறைவனாகவே கேட்டு கொண்டதாகும். இதற்கு சான்று சுந்தரமூர்த்தி நாயனார் வரலாற்றில் சுந்தரரை இறைவன் தடுத்தாட் கொண்ட போது நம்பியரூரனை சுந்தர தமிழால் பாட்டிசைக்க சொன்ன வரலாறு. அதுமட்டுமின்றி, திருநாவுக்கரசர் சொல்கிறார்
"சலம்பூவோடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசைப் பாடல் மறந்தறியேன்"
என்றும் திருஞானசம்பந்தர் தமது திருபதிகங்களில் தம்மை தமிழ்ஞானசம்பந்தன் என்றே கூறிப்பிட்டும் கொள்கிறார்.
திருமுறையா அல்லது சமஸ்கிருதத்தில் உருவான மந்திரங்களா என்று ஒப்பிடுகையில் திருமுறைகள் தான் முன்னிலை வகிக்கும். காரணம் மந்திரங்களின் மூலம் அற்புதங்கள் பல நடந்துள்ளதற்கான சான்று ஒன்று கூடயில்லை. சமஸ்கிருதம் என்பது தேவ பாட்ஷை இறைவனிடம் பேச உதவும் மொழி. ஆனால் தமிழ் வேதங்களோ அவனை உளம் குளிர்விக்கும் தேவமிர்தம். மந்திரங்களை குற்றம் சாட்டுவதற்காக சொல்லவில்லை, திருவாசகத்தில் சொன்னது போல்
"சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவப்புரத்தி னுள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து"
என்று நாம் சொல்லும் மந்திரங்களாகட்டும், பாராயண தோத்திரங்கள் ஆகட்டும் அவற்றின் பொருளை உணர்ந்து பாடுவதால் தான் இறைவனின் பேராற்றல் பரிபூரணமாக கிடைக்கும். பாட்டின் பொருள் தெரியாது ஏடுகளில் உள்ளதை படித்துவிட்டால் மட்டும் போதாது என்பதனை நன்கு தெளிவுபடுத்தி கொள்ளுதல் அவசியம். ஆனால் திருமுறைகள் ஆகட்டும் திருப்புகழாகட்டும் பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் தான் அமையப்பட்டுள்ளது. எழில் மிகு தமிழால் மென்மையான வார்த்தைகளால் வருணித்து உள்ளோம் நெகிழ்ந்து அருளியவை. உள்ளம் உருகி ஒதினால் கலங்காத கல் நெஞ்சும் கறைந்து போகும்.
சொல்ல சொல்ல அடக்கத்தில் இல்லாத பேறுகளை பெற்றவை தான் நமது தமிழ் வேதம். அரசர்கள் காலங்களில்  இத்தமிழ் மறைகளை ஒதக் கூடியவர்களை ஒதுவார் என்று பணிவோடும் மரியாதையாகவும் கூறுவர்.  பல சுபக்காரியங்கள் இவர்களை முன்னிலைப்படுத்தியே நடத்தப்படுவதும் உண்டு. ஆனால் இன்று நமது நாட்டை பொருத்த வரையில் ஒதுவார்களுக்கு பஞ்சமாகிய நிலையில் உள்ளன. அதுமட்டுமல்லாது, பல ஆலயங்களில் திருமுறைகள் ஒதப்படமலே பூஜைகள் நடந்த வண்ணம் உள்ளது. அப்படியே ஒதப்பெற்றாலும் ஆலய குருக்கள் சிலர் அவர்களை இரண்டு அல்லது மூன்று பாடல்களை மட்டும் பாட சொல்லி கால அவகாசம் கொடுக்கின்றனர். காரணம் பொது மக்களால் அவ்வளவு நேரம் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்ய முடியாதாம். இப்பொழுதெல்லாம் திருமுறைகள் இறைவனுக்காக பாடப்படவில்லை மக்களுக்காக அவர்களின் விருப்பத்திற்காகவே பாடப்படுகிற நிலை! எத்துணை கேவலம். நம்மால் வழிப்பாட்டிற்க்கும் நேரத்தை ஒதுக்க முடியாத நிலையா?
வெள்ளம் வரும் முன் தான் அணை போட வேண்டும் வந்த பின் போட்டு பயனில்லை. இதனை இங்கு கூறிப்பிட காரணம் துன்பம் வந்த பின் இறைவனிடம் முறையிடுவதை விடுத்து அவன் அருளால் கிடைக்கப் பெற்ற நலத்தோடு இருக்கும் போதே நன்றி விசுவாசத்தை காட்ட வேண்டும்.
ஆக ஆலயங்களில் திருமுறைகள் ஒதப்படுவதை ஒவ்வொரு பக்தர்களும் முதலில் உறுதி செய்து கொள்வது அவசியம். அதற்கு முன் நாம் பயிற்சி பெற்ற மாணவராக இருத்தல் வேண்டும். பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு சமயத்தை போதிக்கவும், திருமுறைகளை கற்றுக் கொள்ள ஊக்குவிக்க வேண்டும். குடும்பத்தோடு ஆலயத்திற்கு சென்று இறைவன் சன்னதிக்கு முன்னின்று அவருக்கு உரியப் பாடல்களை ஒதிப் பிரார்த்திக்கவும் செய்ய வேண்டும். ஆலய உறுப்புனர்கள் தங்களது ஆலய பூஜை காலங்களில் பஞ்சபுராணம் ஒதுதலை கட்டாயப்படுத்துதல் வேண்டும். சிவன் ஆலயமாகயிருந்தால் பஞ்சபுராணமும், முருகன் ஆலயமாகயிருந்தால் பஞ்சபுராணத்தோடு திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி, கந்தர் அநுபூதி ஒதுதலையும், அம்மன் ஆலயங்களில் பஞ்சபுராணமும், அபிராமி அந்தாதியும் ஒதப்பட வேண்டும்.
இறுதியாக நமது பண்பாட்டையும் வழிப்பாட்டு முறைகளையும் சரியாக பின்பற்றினாலே போதும், யாரும் நம்மை ஏமாற்றவோ, அல்லது தெரியாத சடங்கு முறைகளின் பதிப்போ நம்மை அண்டாது.

சிவாய திருசிற்றம்பலம்

மறந்து போகும் தமிழ் சான்றோர் - வ. உ. சிதம்பரம் பிள்ளை

  வ. உ. சிதம்பரம் பிள்ளை வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார். அவர், 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் இந்த...