Saturday 9 May 2020

இந்து சமய நூல்கள்


இந்து சமயம் வேதங்களை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்து சமயத்திற்கு வேதநெறி என்றும் பெயர் உண்டு.

இந்து சமயத்தின் அடிப்படை நூல் வேதம். வேதங்களில் அறிவாராய்ச்சிக்கு உகந்தவையும், எக்காலத்திலும் மாற்றவொண்ணாதவையுமான பேருண்மைகளும், தத்துவங்களும் கூறப்பட்டுள்ளன.

வேதங்களை இறைவன் ரிஷிகள் மூலமாக உலகிற்குத் தந்தார். பாரதநாட்டின் முற்கால ரிஷிகள் தங்கள் தவயோக பலத்தால் வேதங்களை அறிந்து உலகிற்குத் தந்தனர்.

வேதங்களை வியாசர் நான்காகத் தொகுத்தார். அவை ரிக்வேதம், யஜுர்வேதம், சாமவேதம், அதர்வண வேதம்.

வேதங்களின் தத்துவம் மற்றும் வேத மதத்தின் சாரத்தை கொண்டிருப்பவை உபநிஷதங்கள். எல்லா இந்திய தத்துவ வகுப்புக்களும் இவைகளில் இருந்துதான் ஊக்கத்தையும் பலத்தையும் பெறுகின்றன.

பல நூற்றாண்டுகளாக இந்தியாவின் சமயங்களிலும் கலாச்சாரத்திலும் ஊடுருவி நிற்கும் முக்தி என்ற வாழ்க்கையின் அறுதி லட்சியம் இந்த உபநிஷதங்களில் இருந்து தோன்றியவையே. 

ரிக்வேதம்

இந்த வேதம் வலியுறுத்துவது ஒன்றே ஒன்றுதான்: ஏகம் சத் விப்ர: பஹுதா வதந்தி.” அதாவது உண்மை என்பது ஒன்றே ஒன்றுதான். இருக்கும் அந்த ஒரு உண்மையை ஞானியர் பல பெயர்களைத் தந்து அழைக்கின்றனர்.

வேதத்தின் தத்துவம் இவ்வளவுதான். மாறிமாறிவரும் தனித்தனியான வடிவங்கள் அனைத்தும் அந்த ஒரே இறைவனுடைய பிரதிபலிப்புகள் என்பதுதான் நம் அடிப்படைக் கொள்கை.  

“இந்திரன், மித்திரன், வருணன் என்றெல்லாம் அழைக்கப்படுவது, உள்ளது, ஒன்றே. மகான்கள் அவரைப் பல பெயர்களிட்டு வழங்குகிறார்கள்,” என்கிறது ஒரு ரிக்வேத மந்திரம்.

இந்த வேதத்தில் வரும் இன்னொரு முக்கிய உபநிஷதம், ஐத்ரேய உபநிஷதம். இதில் பரமாத்மா அல்லது எல்லாம் வல்ல இறைவன் மட்டுமே ஆதியில் இருந்தார் என்று கூறுகிறது. அவருக்கு உலகத்தைப் படைக்க வேண்டும் என்ற விருப்பம் தோன்றியது. தன்னிடமிருந்த சக்தியால் இந்த உலகை அவர் படைத்தார். படைத்த எல்லாவற்றுக்குள்ளும் அவர் ஊடுருவி இருந்தார்.

யஜுர்வேதம்

இந்த வேதத்தில் வரும் ஈசாவாஸ்ய உபநிஷதம் ஆன்மாவின் இயல்பை விளக்குகிறது. யார் ஒருவர் ஆன்மாவை தனக்குள்ளேயும், மற்றொருவருக்குள்ளும் காண்கிறாரோ அவர் துன்பத்தில் இருந்தும் மாயையில் இருந்தும் விடுபடுகிறார்.

யஜூர்வேதத்தில் வரும் இன்னொரு முக்கிய உபநிஷதம், கட உபநிஷதம் ஆகும். இதில் நசிகேதன் என்ற சிறுவன் யமராஜாவிடம் (மரண தேவன்) சென்று, மரணத்தின் மர்மத்தை தெரிந்துக் கொண்டு, ஆன்மீக ஞானத்தை பெறுகிறான்.

இந்த வேதத்தில் வரும் ஸ்வேதாஸ்வதர உபநிஷதம், தியான யோகமும் அதன் வழிமுறைகளான மனக்கட்டுப்பாடு, மன ஒருமைப்பாடு, ஆசனம், பிராணாயாமம் (அதாவது மூச்சுக் கட்டுப்பாட்டின் மூலம் பிராண சக்தியை ஒழுங்கு படுத்துதல்), மற்றும் யோகத்தின் பலன்களையும் விளக்குகிறது.

சாமவேதம்

இதில் வரும் கேன உபநிஷதம், இறைவனை அடைவதற்கு தவம், தமம் (சுயக்கட்டுப்பாடு), கர்மம் (சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள செயல்கள்) ஆகிய ஒழுக்கமுறைகள் அடிப்படைத் தேவைகள் என்று கூறுகிறது.

அதர்வ வேதம்

இதில் வரும் மாண்டூக்ய உபநிஷதம் பிரணவம், ஆன்மா, பிரம்மன் ஆகிய தத்துவங்களை விளக்குகின்றது. அழியாத உண்மையான பிரம்மத்தில் அழகிய சின்னமாக இருப்பது பிரணவம். பிரணவ தியானம் கடைசியில் ஆன்ம அனுபூதியை தரும். இறுதியில் ஆன்மாவும் பிரம்மமும் ஒன்றே என்று இந்த உபநிஷதம் உறைக்கிறது. 

முண்டக உபநிஷதம் இறை அனுபூதியை அடைய செய்யவேண்டிய ஆன்மீக சாதனைகள் பற்றி விளக்குகிறது. ’ஓம்’ என்ற பிரணவத்தின் மூலம் பிரம்மத்தைத் தியானம் செய்ய வேண்டிய முறையை வில்-அம்பு உதாரணம் மூலம் அழகாக எடுத்துரைக்கிறது. இத்தியானம் ஒருவர் தனக்குள்ளே ஆன்மா அல்லது பிரம்ம அனுபூதியை அளிக்கிறது. ஒருவரைக் கட்டுப்படுத்தியிருந்த அறியாமை என்ற பந்தங்கள் இதனால் அழிகின்றன.

"வாய்மையே வெல்லும்" என்ற புகழ்பெற்ற மொழி இந்த முண்டக உபநிஷதத்தில்தான் வருகிறது.

இந்து சமயத்தில் கடவுள் கொள்கை

கடவுள் என்பவர் யார்? "யாரிடம் பிரபஞ்சத்தின் தோற்றம், நிலைபெறல், ஒடுக்கம் இவை நடைபெறுகின்றனவோ" அவரே கடவுள்.

கடவுள் என்றும் உள்ளவர், எப்போதும் தூயவர், என்றும் சுதந்திரமானவர், எல்லாம் வல்லவர், எல்லாம் அறிந்தவர், கருணை வடிவினர், குருவிற்கெல்லாம் குருவானவர், எல்லாவற்றிற்கும் மேலாக அந்த இறைவன் சொல்லுக்கு அடங்காத அன்பு வடிவினன்
இந்து சமயம் கடவுளை பல பெயர்கள் கொண்டு அழைக்கின்றது. பரம்பொருள், பரமாத்மா, இறைவன், தெய்வம், தேவி, என்று பல சொற்கள் கடவுளைக் குறிக்கின்றன.

கடவுள் ஒருவர் தான். அவருக்கு பல பெயர்களும் பல உருவங்களும் உள்ளன.

ஒரே பரம்பொருளைக் குறித்துத்தான் இப்படிப் பலவிதமான உருவங்களும் வழிபாடுகள் உள்ளன.

ஒவ்வொரு தெய்வ வடிவமும் அந்தப் பரம்பொருளைப் பற்றிய ஓர் அம்சத்தை விளக்க வந்தது. ஒவ்வொரு வடிவமும் ஏதோ ஒரு வகையில் நம் சிந்தனையை இறைவன்பால் திருப்புகிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அப்போதுதான் நாம் எந்தக் குழப்பமும், பயமும் இல்லாமல் ஆன்மீக வாழ்க்கையைத் தொடரலாம்.

ஏராளமான ரிஷிகளும், மகான்களும் தங்கள் இதயத்தில் தோன்றிய பரவசமூட்டும் காட்சிகளைக் கண்களாலும் கண்டனர். ஆகவே இந்து சமயத்தின் தெய்வ வடிவங்கள் எல்லாம் மெய்யானவை. அவை வெறும் சின்னங்கள் அல்ல. முயன்றால், நாமும் அத்திரு உருவங்களை காணலாம்.

ஏகம் ஸத் விப்ரா பஹூதா வதந்தி

இந்து சமய முக்கியமான கொள்கை இது. ஏகம் ஸத் என்றால் பரம்பொருள் ஒன்று என்று பொருள். விப்ரா பஹூதா வதந்தி என்றால் பண்டிதர்கள் பலவிதமாக கூறுகின்றனர் என்பது பொருள்.  

இறைவன் எல்லையற்ற சக்தி உடையவர். அவரால் இயலாதது என்பது இல்லவே இல்லை. பக்தர்கள் எந்த வடிவத்தில் காண விரும்புகின்றனரோ அந்த வடிவத்தில் அவர் காட்சியளிப்பார். அவ்வாறே பல பக்தர்கள் கண்ட வடிவங்களையே நமக்கு வெளிப்படுத்திச் சென்றுள்ளனர். ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் மட்டும் தான் கடவுள் வருவார் என்பது அவரது எல்லையற்ற சக்தியுடைமைக்கும், எல்லையற்ற கருணைஉடைமைக்கும் இழுக்காகும். அத்தகைய சக்தி குறைந்தவராக, ஒரு பக்கச் சார்புள்ளவராகக் கருதுவது கடவுள் கொள்கைக்கு எதிரானது ஆகும்.

மேலும் எந்த வடிவிலும் இறைவனை வழிபடலாம் என்பதே உலகில் அமைதி நிலவச் செய்யும் கொள்கையாகும். ஒரு குறிப்பிட்ட வடிவத்தில்தான் வழிபடவேண்டும் எனக் கூறுவது சண்டை, சச்சரவு, போட்டி, பொறாமைகளுக்கே வழிவகுக்கும்.

இக்காரணங்களால் தான் உலகத்து அறிஞர்கள் அனைவரும் ஏகம் ஸத் விப்ரா பஹூதா வதந்தி என்ற இந்து சமயக் கொள்கையைப் போற்றுகின்றனர்.

இறைவனுக்கு பலவடிவங்களும், பல நாமங்களும் உள்ளன. அவரவர் விரும்பும் நாமத்தில் அழைக்கின்றனர். அவை அனைத்தும் ஒரே இறைவனைக் குறிப்பனவையே.

இவ்வுலகில் எந்த ஒரு பொருளுக்கும் ஒரு குறிப்பிட்ட பெயர் உண்டு எனக் கூற இயலாது. ஒவ்வொருவர் ஒவ்வொரு பெயர் கூறி அழைப்பார்கள்.

உதாரணமாக, தண்ணீர் என தமிழர்கள் கூறுவதைகே ஜலம், பானி, வாட்டர் என் சமஸ்கிருதம், ஹிந்தி, ஆங்கிலம் பேசுபவர்கள் கூறுவர். ஒருவர் கூறுவதே சரி, மற்றவர்கள் கூறுவது தவறு எனச் சொன்னால் அது அறிவுடைய கூற்று ஆகாது. இவ்வாறு இவ்வுலகின் எந்தப் பொருளுக்கும் இதுதான் நாமம் எனக் கூற இயலாது. இதுவே இவ்வாறெனில் இப்பிரபஞ்சத்தைப் படைத்த இறைவனை ஒரு பெயருக்குள் அடக்கிவிடலாம் என்பது அறிவுடைமை ஆகாது.

இதனால் தான் நம் ஞானிகள் ஓருருவம், ஓர் நாமம் இல்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடி... எனக் கூறுகின்றனர்.

எனவே வேதக் கொள்கையான இக்கருத்திற்கு மாறாக ஓர் உருவம், ஓர் நாமம் மட்டுமே கடவுளுக்கு உண்டு எனக் கூறும் எந்த சமயமும் நமக்கு ஏற்புடையதல்ல.

எனவே உலகம் போற்றும், உலகில் அமைதியை நிலவச் செய்யும் ஏகம் ஸத் விப்ரா பஹூதா வதந்தி என்ற சிறந்த கொள்கைதனைப் புரிந்து அதன்படி வாழ்ந்து உய்வடைவோமாக!

பல கடவுளர்கள் என்ற தோற்றத்திற்கு ஆதாரம் மும்மூர்த்திகளைப் பற்றிய பக்தி நெறிகள். மும்மூர்த்திகள் என்றதும் பிரம்மா, விஷ்ணு, சிவன், அவர்களுடைய தேவியர் என்பது நிலையாகும். மும்மூர்த்திகளும் ஒரே கடவுளின் மூன்று முகங்கள் என்றும் கொள்ளலாம். அந்த ஒரே கடவுளைச் சர்வேசுவரன் என்றும் சொல்வோம்.

அதற்குப் பிறகு கணேசரும், முருகனும் வருகிறார்கள். இவர்களும் அந்தச் சர்வேசுவரனுடைய வேறு முகங்கள், வடிவங்கள், அம்சங்கள் என்றெல்லாம் சொல்லலாம்.

அடுத்த நிலையில், திக்பாலர்கள் என்றும் லோகபாலகர்கள் என்றும் அழைக்கப்படும் தெய்வங்கள். இவர்கள் உலகை எல்லா திசைகளிலும் காத்து நமக்குப் பல நலன்களை அருள்பவர்கள். இந்திரன், வருணன், அக்னி போன்ற வேத கால தெய்வங்கள் இந்த வரிசையில் அடங்குவர். இந்த உருவங்களும் அந்த ஒரே பரம்பொருளின் சக்திகளைக் குறிக்கின்றன.

இதற்குப் பிறகு நான்காவது நிலையில் இருப்பது கிராமதேவதைகள், சிறு தெய்வங்கள்.    இவ்வடிவங்களும் ஓரளவுக்கு அந்தப் பரம்பொருளின் சில அம்சங்களைச் சித்தரிக்கின்றன. புயல், நெருப்பு, மின்னல், சூறாவளி, எரிமலை இப்படிப் பலப்பல வகைப்பட்ட இயற்கை சக்திகளை இறைவனின் அம்சமாகக் காணுவது வழக்கம்.

இறைவனுக்குப் பல்வேறு திருநாமங்கள் உள்ளன. அவருடைய எண்ணற்ற உருவங்கள் மூலம் அவரை அணுக இயலும். எந்தப் பெயர் மற்றும் உருவம் மூலம் இறைவனை நீ வழிபட்டாலும், அவற்றின் மூலம் உன்னால் அவரை அடைய முடியும்,” என்கிறார் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்.

பகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார், "நீ எந்த உருவத்தில் என்னை வழிபட்டாலும், எந்த விதத்தில் என்னை அண்டி வந்தாலும் நான் உனக்கு அருள் செய்வேன்." இந்து சமயத்தின் அடிப்படைத் தத்துவத்தை விளக்க இந்தச் சொல்லே போதும். எல்லோருக்கும் எல்லாமாக இருக்கிற அந்த ஆண்டவன் பக்தர்கள் விரும்பும் வடிவத்தில் அவர்களுக்குக் காட்சி தந்து அருள் செய்வான். அன்போடு அவனிடம் அவர்கள் எதையும் கேட்கலாம்.

பொதுவாக, அனைத்து தெய்வங்களுக்குமே மூன்றுவித வெளிப்பாடும், உருவமும் உண்டு. அவை:

  • முதலாவது - மூர்த்தி, அதாவது விக்கிரமாக செதுக்கப்படுவது. பெரும்பாலும் விக்கிரங்களை நாம் வீட்டிலோ கோவிலிலோ வைத்து வழிபடுவோம்.
  • இரண்டாவது - யந்திரம். யந்திரதை தகட்டில் அல்லது காகிதத்தில் வரையப்படுகிறது.
  • மூன்றாவது - மந்திரம். மந்திரதை மனத்திற்குள் அல்லது உரக்கமாக சொல்லலாம். ஒவ்வொறு தெய்வதிற்கும் ஒரு தியான சுலோகம் உண்டு. அதை உச்சரித்தால், அந்தத் தெய்வம் இதயத்தில் எழுந்தருளும்.



மறந்து போகும் தமிழ் சான்றோர் - வ. உ. சிதம்பரம் பிள்ளை

  வ. உ. சிதம்பரம் பிள்ளை வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார். அவர், 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் இந்த...