Tuesday 24 October 2017

கந்தருக்கு அலங்காரம் – Kantharukku Alangaram by Vickraman Ponrangam


அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ், கந்தர் அந்தாதி, சேவல், மயில், வேல் விருத்தம்,கந்தர் அநுபூதி ஆகியவற்றை விட மனம் உருகி இத்துணை பெருமிதம் உடையவனா முருகன் என்று நம்மை வியப்பில் ஆழ்த்தும் வல்லமை கொண்டது கந்தலரங்காரம் என்று சொல்லாம். அழகு தமிழால் அழகுக்கு அழகு சேர்க்கும் கோவையே இப்பதிகமாகும். காரணம் திருப்புகழோ பதினாராயிரம் பாடலுக்கு மேற்ப்பட்டது. அதில் வருணிக்கமலா இதில் வருணித்துள்ளார் என்றால் ஆம் என்னும் பதில் ஒன்றே வரும். சங்க இலக்கியத்தில் புதிய பரிமாண தோற்றத்தை கொடுத்தவர் அருணகிரிநாதர்.

காப்பியங்களை கவிதைகளாகவும், பாடல்களாகவும் கொடுத்து நம்மையும் ஒரு கவிஞராக உருமாற்றும் சக்தியை புகட்டியே இவற்றை வழங்கியுள்ளார் என்பதுவே உண்மை.
"அடல் அருணைத் திருக்கோபுரத்தே அந்த வாயிலுக்கு
வட அருகில் சென்று கண்டுகொண்டேன் வருவார் தலையில்
தடபட எனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்
கடதட கும்பக் களிற்றுக்கு இளைய களிற்றிணையே."
இக்காப்பு செய்யுளின் துவக்கத்திலேயே திருவண்ணமலை அருணச்சலஸ்வரர் ஆலயத்தை வருணித்து அங்கு குடியிருக்கும் பிள்ளையாருக்கு நடைப்பெறும் சிறப்பு வழிப்பாட்டினையும் பக்தர்கள் பிராத்திக்கும் விதத்தையும் அழகாக சிறுப் பிள்ளைக்கு சொல்வது போல் குறிப்பிட்டிருப்பது எவ்வளவு அருமையாகவுள்ளது. முதல் பாடலிலே இவ்வளவு சிறப்பு என்றால் முழு கந்தரலங்காரமும் எத்துணை சுவை அடங்கியிருக்கும்.

மேலும் முருகப் பெருமானின் திருவருளை உண்மையாகவும் உளமாரவும் உணர்ந்தோர்க்கு ஏற்படும் பேரின்பத்தை அருணகிரியார் எப்படி கூறுகிறார் தெரியுமா?

"பெரும் பைம் புனத்தினுள் சிறு ஏனல் காக்கநின்ற பேதை கொங்கை
விரும்பும் குமரனை மெய் அன்பினால் மெல்லமெல்ல உள்ள
அரும்பும் தனி பரம ஆநந்தம் தித்தித்து அறிந்த அன்றே
கரும்பு துவர்த்து செம் தேனும் புளித்து அறக் கைத்ததுவே."
என்ற இப்பாடலின் வழி வள்ளியம்மை மீது அளாதி பிரியம் கொண்டிருக்கும் முருகனின் அன்பை நாம் உணர்ந்து விட்டோமானால், சுவை மிகு கரும்பும் துவரக்கும், தேவமிர்த இனிப்பை போன்ற தேனும் புளித்து போகுமாம்.
திருவருளைப் பற்றி குறிப்பிடும் அருணகிரியார் நம்மை சூட்சுமமாக மூடர்கள் என்று திட்டாமல் திட்டுகிறார் இனி வரும் பாடல் வரிகளில்.
"அழித்துப் பிறக்கவொட்டா அயில் வேலன் கவியை அன்பால்
எழுத்துப்பிழை அறக் கற்கின்றிலீர்கள் எரி மூண்டது என்ன
விழித்துப் புகை எழப் பொங்கு வெம் கூற்றன் விடும் கயிற்றால்
கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கும் அன்றோ கவி கற்கின்றதே"
என்ற பாடல்களின் வழி கூற வருவது என்னவென்றால், இவ்வுடலில் உயிர் இருக்கும் போதே, இவ்வுடல் சகல ஆரோக்கியத்துடன் இருக்கும் போதே, தீவினைகளை அழித்து முக்தியை தரவல்ல வேலினை கொண்டிருக்கும் ஞான வேலினை தாங்கிய வண்ணம் அருள்பாலிக்கும் திருமுருகப் பெருமானை புகழாமல், எமன் பாசக் கயிற்றை வீசி இவ்வுயிரை இழுத்து செல்லவிருக்கும் காலத்தில் அவற்றை படிப்பதால் யாது பயன் என்கிறார்.

அதுமட்டுமா,
தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் தானம் என்றும் இடுங்கோள் இருந்தபடி இருங்கோள் எழு பாரும் உய்யக் கொடும் கோபச் சூர் உடன் குன்றம் திறக்கத் தொளைக்க வைவேல்
விடும் கோன் அருள்வந்து தானே உமக்கு வெளிப்படுமே."
என்ற பாடலின் மூலம் நாம் நமது மனத்தையும் ஐம்புலனையும் அடக்கி, ஏழைகளுக்கு தானம் கொடுத்து நாம் உண்டு நம் வேளை உண்டு என்றுயிருந்தால் கொடிய சூரபத்மனை அழித்த சுப்ரமண்ய சுவாமியின் திருவருளை தானாகவே பெற்றிடலாம் என்கிறார்.
மேலும், நாளும் கோளும், முருகன் அருளிருந்தால் ஒன்றும் நம்மை செய்யாது என்று
நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த
கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே"
இப்பாடலின் வழி நம்மை தெளிவடைய செய்கிறார்.

ஆகவே இறுதியாக குமரக்கடவுளின் பெருமைதனை உரைக்கும் இப்பாடல்களை வாசித்தாலோ, பாராயணம் செய்தலோ அத்துணை நன்மைகளை தரவல்லது. பக்தி இலக்கியம் என்று பாராமல் படித்தால் கந்தரலங்காரமாகட்டும், திருப்புகழகட்டும் இவை தமிழுக்கு கிடைத்த பொக்கிஷமாகும்.

No comments:

Post a Comment

மறந்து போகும் தமிழ் சான்றோர் - வ. உ. சிதம்பரம் பிள்ளை

  வ. உ. சிதம்பரம் பிள்ளை வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார். அவர், 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் இந்த...