Saturday 13 January 2018

பொங்கல் திருநாளும் அதன் பெருமையும்; Thai Thirunal Special


தமிழர்கள் பெற்ற தாயையும் தெய்வமாக பார்த்தனர். உயிர்வாழ துணையாக இருந்து வரும் பஞ்சபூதங்களையும் தெய்வமாக பார்த்தனர். இயற்க்கைவளங்களை போற்றி வணங்க அப்போதே பொங்கல் என்னும் விழாவை எடுத்து சிறப்பாக நடத்தி மகிழ்வுற்று குடும்பத்தினரோடு ஒற்றுமையாக வாழ்ந்தனர்.
நரகசுரனை வதம் செய்த தீபாவளியை விட தமிழன் தன் பசி தீர்த்து ஊரர் பசியையும் தீர்த்து கொண்டிருக்கும் விவசாயத்திற்கு தனது நன்றிக்கடனை செல்லுத்தும் உன்னத நாளே பொங்கல் திருநாள். நான்கு நாளுக்கு தொடர்ந்து திருவிழா கோலமாக கொண்டாடிட முறையே, போகி, தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், மற்றும் காணும் பொங்கல் என்று வகுத்து இன்றளவும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
ஆக இந்த நான்கு நாட்கள் விழா நமக்கு உணர்த்தும் உண்மை விளக்கத்தினை நாம் பார்ப்போம்.
போகி
போகியின் முக்கிய அம்சமே பழையன கழிதலும் புதியனபுகுதலுமே ஆகும். பலரும் இக்கருத்தில் உள்ள கூற்றை தவறுதலாக புரிந்து கொள்கின்றனர். அவை என்னவென்றால் வீட்டில் உள்ள பழைமையான பொருட்கள் அனைத்தையுமே எரித்து விட்டு புதிதாக விலை கொடுத்து வாங்கி கொள்வதுவே சிறப்பு என்று ஏற்றுக் கொள்கின்றனர். இது முற்றிலும் தவறான கருத்துக்கள் ஆகும் என்பதனை  உணர்வது சிறப்பு, காரணம் இக்கருத்துக்களால் நாம் எத்தனையோ சித்தாந்த குறிப்புக்களையும், சமயம் சார்ந்த நூல்கள், சித்த மருத்துவ குறிப்புகள், தமிழ் மறை நூல்கள், என்று பலவற்றை  இழந்துள்ளோம் என்பதனை இவ்வேளையில் அறிவது அவசியம். தவறான போதனைகளால் நாம் இழந்தவற்றில் இப்போது உள்ளவற்றையும் இழக்க வழிகொடுக்க கூடாது.
நம்முள் உள்ள எதிர்மறையான எண்ணங்களையும், கூடாத பழக்க வழக்கங்களையும் இந்நன்நாளில் தீயில் இட்ட குப்பைகளை போல் பொசுக்கி விடுவது  சிறப்பு. இந்த ஆண்டு முதல் நம்மிடம் உள்ள தீய குணங்கள் அனைத்தும் நம்மை விட்டு போய் விட வேண்டும், மீண்டும் அதில் நாட்டம் செலுத்துதல் கூடாது என்று சபதம் ஏற்க இதுவே தருணமாகிறது. இதற்கே போகி என நாம் கொண்டாடுகிறோம்.

தைப் பொங்கல்
ஆடி மாதத்தில் வயலில் விதைக்கும் பயிற்களை அறுவடை செய்யும் காலமே, தைமாதம் ஆகிறது. அறுவடை செய்த புத்தம் புது அரிசியை கொண்டு பொங்கல் செய்து விளைச்சலுக்கு உதவியாக இருந்த சூரிய பகவானுக்கும், வயலை உழுதிட உதவியாக இருந்த மாடுகளுக்கும் நமது நன்றி கடனை செலுத்து வதற்கே பொங்கல் திருநாளை நாம் கோலாகலமாக கொண்டாடி மகிழ்கிறோம்.
அதே சமயம், பொங்கு என்னும் சொல்லினை நாம் அவசியம் பொருள் பட விளங்கி கொள்வது அவசியம். பொங்கு என்றால் கொதித்தல், மிகுதல், சமைத்தல் என்று பொருள் படுத்துகிறோம். அதிலும் முக்கியமாக செழித்தல் என்றும் பொருள்பட செய்துள்ளனர் நம்முன்னோர்.
பொங்கலிடும் போது பால் எந்த அளவிற்கு பொங்கி வருகிறதோ அந்த அளவிற்கு நமது வாழ்வும் செழித்து வரும் என்பது நம்பிக்கையும் ஆகும். விவசாயிகளின் திருநாளாகிய பொங்கலை நகர்ப்புற மக்கள் கொண்டாடுவதால் யாது பயன் என்பது பலரின் கருத்தாக அமைந்துள்ளது. இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய கருத்தாகும்.
நகர்ப்புற மக்களும் கொண்டாட வேண்டும் என்பதன் காரணம், விவசாய மக்கள் நமக்காக அறுவடை செய்து கொடுக்கும் அரிசியையும் அவர்களின் உழைப்பையும் அன்று ஒரு நாளாவது, மதித்து நினைவு கூர்தல் வேண்டும் என்பதற்காகவே. மேலும் காலம் தவறாது நமக்கு தினம் தினம் ஒளியை கொடுத்து நமது வாழ்வை சிறக்க செய்து கொண்டிருக்கும் சூரியனுக்கும் நாம் நன்றியினை செலுத்துவது அவசியமாகிறது.












மாட்டு பொங்கல்
மேலே கூறிப்பிட்டு சொன்னது போல் மாட்டு பொங்கல்  வயலை உழுதிட உதவியாக இருக்கும் மாடுகளுக்கு நமது நன்றியை தெரிவித்து கொள்ளும் நாளாக இந்நாள் நமக்கு துணைபுரிகிறது. அதுமட்டுமல்லாது, பல வகைகளில் நமக்கு உதவிகரமாகவும் இருக்கும் காரணத்தினாலும் இவ்விழா நமது பண்பாட்டில் காலம் காலமாக இடம் பெறுகிறது.
உயிரினங்கள் மீதும் நாம் அன்பு வைத்திருத்தல் அவசியம் என்பதனை பிறருக்கு உரைக்கவுமே இந்நாள் கொண்டாடி வருகிறோம். பொதுவாக மாடுகளை இந்நாளில் அலங்காரம் செய்து, அவற்றிற்கு முன் பொங்கலிட்டு அவ்வுயிரினங்களின் வயிறு நிறைய பழங்கள், உணவுகள், திண்பண்டங்கள் போன்றவற்றை கொடுத்து மகிழ்வுற செய்கிறோம்.
திருவள்ளுவர் ஆண்டு
ஒவ்வொரு தை இரண்டாம் நாள் திருவள்ளுவர் ஆண்டு பிறக்கிறது. இது நமது தமிழர்களின் ஆண்டாக கொண்டாடப்படுகிறது. வள்ளுவரின் ஆண்டை ஒரு துணையாக கொண்டு தமிழர்கள் வாழ்ந்த காலம் ஒரளவிற்கு கணிக்கப்படுகிறது.
காணும் பொங்கல்
காணும் பொங்கல் என்பது திருமணம் ஆகாத கண்ணி பெண்கள், தை மூன்றாம் நாள் ஆலயத்திற்கு சென்று இறைவனை பிராத்தித்து, தங்களின் வாழ்வு சிறக்க பொங்கலிட்டு வேண்டி கொள்ளும் நாளாகும். அதே சமயம், உறவினர் இல்லங்களுக்கு சென்று உணவு பொருட்களை பகிர்ந்து கொடுத்து மகிழ்ச்சியையும், ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து பழைய நினைவுகளை நினைவுபடுத்தி கொண்டும் ஆனந்திக்கும் திருநாள்.


இதுவே தமிழர்கள் மகிழ்ச்சியை அனுபவிக்க வகுத்து கொடுத்த உன்னத சேவைகள் எனலாம். மனிதன் மனிதனாக எப்படி வாழ வேண்டும் என்பதனை இது போன்ற திருநாட்களின் வழி நமக்கு கற்று கொடுத்துள்ளனர். ஒற்றுமையாக இருந்து இறை சிந்தனையோடு நாம் இறைவனை வணங்கி, தைத் திருநாளை கொண்டாடி மகிழ்வோம்.

- விக்ரமன் பொன்ரங்கம்

No comments:

Post a Comment

மறந்து போகும் தமிழ் சான்றோர் - வ. உ. சிதம்பரம் பிள்ளை

  வ. உ. சிதம்பரம் பிள்ளை வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார். அவர், 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் இந்த...